ஏரியா சபை கூட்டம் நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!
கிராமசபை கூட்டம் போன்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஏரியா சபை கூட்டங்கள் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஆண்டுக்கு 4 நாட்கள் ஏரியா சபை கூட்டங்களை நடத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25, அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14, அண்ணா பிறந்த தினமான செப்.15, சர்வதேச மனித உரிமை தினமான டிசம்பர் 10- போன்ற தினங்களில் ஏரியா சபை கூட்டங்களை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஊரக உள்ளாட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுவது போல நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் வார்டு கமிட்டி அமைத்து, வார்டு வாரியாக ஏரியா சபை அதாவது நகர சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள வார்டுகள் தோறும், வார்டு கவுன்சிலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியை தவிர்த்து மற்ற பகுதிகளில் முதல் ஏரியா சபை கூட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 1-ந் தேதி உள்ளாட்சி தினத்தில் நடைபெற்றது.
இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில், ஏரியா சபை உறுப்பினர்களின் பட்டியலுக்கு அனுமதி அளித்து, வார்டு வாரியாக உதவி பொறியாளர்களை ஏரியா சபைகளுக்கு செயலாளராக நியமித்து அவற்றை நடத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், வார்டு கமிட்டிக்கு 10 பேர் கொண்ட உறுப்பினர்களை நியமிப்பதில் குளறுபடிகள் ஏற்பட்டதால் ஏரியா சபை கூட்டம் நடத்துவது தள்ளிப்போனது. சில வார்டுகளில் கவுன்சிலர்கள் 10 பேர் கொண்ட உறுப்பினர்களின் பட்டியலை மாநகராட்சியிடம் ஒப்படைப்பதில் காலதாமதம் செய்து வந்தனர்.
தற்போது கவுன்சிலர்கள் வார்டு கமிட்டி உறுப்பினர்களின் பட்டியலை மாநகராட்சியிடம் முழுமையாக ஒப்படைத்து விட்ட நிலையில் முதலமைச்சர் உத்தரவின் படி விரைவிலேயே சென்னை மாநகராட்சி வார்டுகளில் ஏரியா சபை கூட்டங்கள் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.