முதல்வரின் வெளிநாட்டு பயணம் முழு தோல்வி - எடப்பாடி பழனிச்சாமி!

முதல்வரின் வெளிநாட்டு பயணம் முழு தோல்வி - எடப்பாடி பழனிச்சாமி!

முதல்வர் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாட்டிற்கு பயணம் செய்ததாக கூறுவது தமிழ் நாட்டு மக்களின் காதில் பூ சுற்றும் வேலை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஜப்பான் நிறுவனத்துடன் சென்னையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி 1891 கோடி முதலீடு கிடைத்தது என்றார். தற்போது அதையும் வெளிநாட்டுக்கு சென்று திரட்டியதால் வந்துது என்கிறார். இதில் எது உண்மை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த பத்து நாட்களாக சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துவிட்டு நேற்று சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், கலைஞர் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்ததோடு, தன்னுடைய வெளிநாட்டுப்பயணத்தால் கிடைத்த முதலீடு குறித்து பேசியிருக்கிறார். இதன் மூலம் ரூ.3,233 கோடி முதலீட்டினை ஈர்த்ததாக சென்னை விமான நிலையத்தில் முதல்வர் பேட்டியும் அளித்திருந்தார்.

முதல் நாள் சிங்கப்பூர்-ஜப்பான் பயணத்தில், முதலில் ரூ.1,258 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்று செய்திகள் வந்தது. பின்னர் ரூ.3,233 கோடி என்றார்கள். மிட்சுபிஷி நிறுவனத்துடன் ரூ.1,891 கோடிக்கு சென்னையிலேயே ஒப்பந்தம் கையெழுத்தானது என்று முன்னர் கூறியிருந்தார்கள். ஆகவே வெளிநாடுக்கு சென்றதால் கிடைத்த முதலீடு என்பது ரூ.1,342 கோடிதான்.

2005ல் கொமாட்சு நிறுவனம் ஜெயலலிதாவால் தமிழ்நாட்டிற்கு அழைக்கப்பட்டது. ஓம்ரான் நிறுவனம் ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் இயங்கி வருகிறது. அவர்களின் இந்திய சி.இ.ஓ.-க்களை அழைத்து, அவர்கள் மூலமாக எளிதாக முதலீடுகளை பெற்றிருக்கலாம். எதற்காக ஜப்பான், சிங்கப்பூர் வரை செல்ல வேண்டும்.

கார் தயாரிப்பிற்கு தேவைப்படும் முக்கிய மூலப்பொருளான செமி கண்டக்டர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை இந்திய-வெளிநாட்டு (பாக்ஸ்கான்) கூட்டு நிறுவனம் சுமார் 1.54 லட்சம் கோடி முதலீட்டில் தமிழகத்தில் துவக்க இருந்த நிலையில், அந்நிறுவனம் கோரிய நிலம் மற்றும் மானியம் வழங்க, தி.மு.க. அரசு மறுத்ததன் காரணமாக, 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய தொழிற்சாலை குஜராத்திற்கு சென்றிருக்கிறது.

பாக்ஸ்கான் நிறுவனம் சுமார் 4 ஆயிரம் கோடி முதலீட்டில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தொடங்கப்பட இருந்த ஆப்பிள் ஐ போன் தொழிற்சாலை தி.மு.க. ஆட்சியின் பாராமுகத்தினால் கர்நாடகாவிற்கு சென்று விட்டது. அதுமட்டுமல்ல, நமது மாநிலத்தில் பெரு முதலீடுகளை செய்திருக்கின்ற பாக்ஸ்கான் நிறுவனத்தின் சி.இ.ஒ. வந்தபோது கூட முதல்வர் அவர்களை சந்திக்கவ்ல்லை. கிட்டத்தட்ட ஒரு லட்சம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் முதலீடுகள் கர்நாடகாவிற்கும், தெலுங்கானாவிற்கும் தாரை வார்க்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் முதலீடு செய்யத் தயாராக இருந்த நிறுவனங்களை, வேறு மாநிலங்களுக்கு அனுப்பி தாரை வார்த்துவிட்டு, துபாய் மற்றும் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று ஆயிரக்கணக்கான முதலீட்டை ஈர்த்ததாக தன் முதுகை தானே தட்டிக்கொள்ளும் திராவிட மாடல் முதலமைச்சரின்

வாய்ச்சவடால் திறமையை மக்கள் அறிவார்கள். தமிழ் நாட்டு மக்களின் காதில் பூ சுற்றும் வேலையை இத்துடன் நிறுத்திவிட்டு, அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீட்டு ஒப்பந்தங்களையும், இங்குள்ள நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு சென்றுவிடாமல் தி.மு.க அரசு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com