காங்கிரஸ்
காங்கிரஸ்

காங்கிரஸ்: கர்நாடகாவில் கொண்டாட்டம் - உ.பி.யில் திண்டாட்டம்!

கர்நாடகாவில் நடைபெற்ற சட்ட சபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். அதுபோலவே, காங்கிரஸ் அங்கே அமோக வெற்றி பெற்றது. ஆனாலும் முதலமைச்சர் தேர்வில் உடனடியாக முடிவெடுக்க முடியாமல் இழுபறி நிலவியது. ஒருவழியாக சித்தராமையாவையே முதலமைச்சர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தது காங்கிரஸ் மேலிடம்.

காங்கிரஸ் கட்சி மட்டுமில்லாமல், அதன் கூட்டணிக் கட்சிகளும் கூட காங்கிரஸ் கட்சியின் வெற்றியையும், பா.ஜ.க.வின் தோல்வியையும் இரட்டை குதூகலத்தோடு கொண்டாடின. மீடியாவும் காங்கிரஸ் கட்சியின் வெற்றியைக் கொண்டாடுவதில் பங்கேற்றன.

ஆனால், அதே சமயத்தில் வடக்கே உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தலும் நடந்தது. அதில் பா.ஜ.க. எதிர்பாராத அளவில் வெற்றியைக் குவித்தது. எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்ததது. இத்தனைக்கும், உ.பி. மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி என்பது குறிப்பிடத் தக்கது.

உத்தரப் பிரதேசத்தில் 17 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. 199 நகராட்சித் தலைவர்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற இடங்கள் நாலே நாலுதான். 544 நகர பஞ்சாயத்துக்களுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது வெறும் பதிநான்கு இடங்கள்தான்.

இத்தகைய படுதோல்விக்கான காரணம் என்ன என்று மீடியாவினரது கேள்விக்கு, உ.பி. காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரிஜ்லால் காப்ரி பதிலேதும் சொல்லாமல் மழுப்பிவிட்டார்.

உ.பி. யில் கடந்த சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்றபோது, காங்கிரஸ் அடைந்த படுதோல்வியைக் காரணம் காட்டி, முந்தைய மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அஜய் குமார் லல்லுவின் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்ட காப்ரியின் பதவியும் விரைவில் பறிக்கப்படும் என்று உ.பி. காங்கிரஸ் வட்டாரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி காப்ரி பதவி இழந்தால், அந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி அங்கே இப்போது எழுந்துள்ளது. அப்படி நியமிக்கப்படுபவர், பிரியங்கா காந்தியின் ஆதரவைப் பெற்றவராக இருப்பாரா? அல்லது கர்நாடகா வெற்றி காரணமாக கட்சியில் கை ஓங்கி இருக்கும் தலைவர் கார்கேவின் ஆசி பெற்றவராக இருப்பாரா? என்பது அடுத்த சஸ்பென்ஸ்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com