தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர்  மீது காங்கிரஸார் புகார்!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் மீது காங்கிரஸார் புகார்!

கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தபிறகும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்குமாறு பிரதமர் மோடி கடிதம் மற்றும் விடியோ மூலம் வேண்டுகோள் விடுத்தது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகும். இது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளார்.

மே 10 ஆம் தேதி தேர்தலுக்கான பிரசாரம் திங்கள்கிழமை (மே 8 ஆம் தேதி) மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது. ஆனாலும் பிரதமர் மோடி தேர்தலில் திங்கள்கிழமை இரவு 10 மணி அளவில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்குமாறு அதன் வேட்பாளர்கள் சார்பில் கர்நாடக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார், செவ்வாய்க்கிழமை காலை விடியோ மூலம் செய்தி வெளியிட்டுள்ளார்.

வாக்குப்பதிவுக்கு முன்னர் உள்ள 48 மணி நேரத்தில் எந்த பிரசாரமும் செய்யக்கூடாது என்பது விதியாகும். ஆனால், 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறி பிரதமர் சார்பில் விடியோ வெளியிடப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வாய்மூடி மெளனமாக இருக்கப் போகிறதா அல்லது அரசியலமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவின்படி நடவடிக்கை எடுக்கப் போகிறதா. இந்த சட்டங்கள் பிரதமருக்கு பொருந்துமா அல்லது பொருந்தாதா? தேர்தல் ஆணையம் தனக்கே உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கப் போகிறதா இல்லை? என்று சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் பிரசார நேரம் அதிகாரபூர்வமாக முடிந்த பின்னரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேட்டிகள் கொடுத்துள்ளதற்கும் காங்கிரஸ் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

இந்த புகார்கள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், தற்போதுள்ள சட்ட விதிகளின்படி தேர்தல் நடைபெறும் மாநிலத்துக்கு வெளியே வெளியிடப்படும் அல்லது விடுக்கப்படும் இதுபோன்ற வேண்டுகோள்கள் விசாரணை எல்லைக்குள் வராது என்று தெரிவித்தனர்.

தேர்தல் நடைபெறுவதற்கு 48 மணி நேரம் முன்னதாக எந்த பிரசாரமும் செய்யக்கூடாது என்றாலும், சமூக வலைத்தளம் மூலம் நடைபெறும் பிரசாரம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 126 வது பிரிவு கீழ் வரவில்லை. தேர்தல் நடைபெறும் இடங்களில் தேர்தல் தொடர்பான எந்த பிரசாரமும் செய்யக்கூடாது என்றுதான் விதி சொல்கிறது. தேர்தல் பிராசரம் முடிவடைந்த பின்னர் சமூக வலைத்தளங்கள், இணையதளங்கள் உள்ளிட்டவை மூலம் அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்வதற்கு தடைவிதிக்கும் வகையில் 126 சட்டப்பிரிவில் சில மாற்றங்கள் கொண்டுவருவது குறித்த சில பரிந்துரைகளை தேர்தல் ஆணையம் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்திடம் 2019 ஆண்டு முன்வைத்தது. ஆனால், அவை இன்னும் பரிசீலனையிலேயே உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com