ஆம் ஆத்மி தேர்தல் உத்தியை காப்பியடித்துதான் காங்கிரஸ் கர்நாடகத்தில் வென்றது: கெஜ்ரிவால்!

ஆம் ஆத்மி தேர்தல் உத்தியை காப்பியடித்துதான் காங்கிரஸ் கர்நாடகத்தில் வென்றது: கெஜ்ரிவால்!

ஆம் ஆத்மி வழியை பின்பற்றித்தான் காங்கிரஸ் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றது என்று அக்கட்சியின் அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

இலவச மின்சாரம், இலவச ரேஷன் மற்றும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை என பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்திருந்தது. ஆம் ஆத்மி கட்சியை பின்பற்றி அறிவித்த இந்த வாக்குறுதிகள்தான் காங்கிரசுக்கு வெற்றியைத் தேடித்தந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டின் அரசியல் நடைமுறைகளில் மாற்றத்தை கொண்டுவந்த்து ஆம் ஆத்மி கட்சிதான். மக்களுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்படும் என்று நாங்கள் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தோம். அதையே காங்கிரஸ் கட்சியும் அறிவித்தது. வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று நாங்கள் அறிவித்தோம். காங்கிரஸ் கட்சியும் இதேபோல தேர்தல் வாக்குறுதி அளித்தது.

பா.ஜ.க.வும் இப்போது இதுபோன்ற தேர்தல் வாக்குறுதிகளை அளிக்க ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக கர்நாடக தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் ஆண்டுக்கு மூன்று எல்.பி.ஜி. சிலிண்டர்கள் இலசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். மேலும் மக்களுக்கு அரை லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்தனர். மதம், சாதிகள் அடிப்படையில் முன்பு வாக்கு கேட்டவர்கள் இப்போது இலவசங்களைச் சொல்லி வாக்கு கேட்கும் நிலைக்கு வந்துவிட்டனர்.

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மூன்று நகர் பாலிகா தலைவர் பதவியையும், 6 நகரப் பஞ்சாயத்து தலைவர் பதவியையும், 6 நகர நிகாம் கவுன்சிலர் இடங்களையும் வென்றுள்ளது. மேலும் பல வார்டுகளில் ஆம் ஆத்மி வென்றுள்ளது.

வெற்றிபெற்ற ஆம் ஆத்மி வேட்பாளர்களில் பாதிக்கும் மேலானவர்கள் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்கள். பா.ஜ.க.வினர் செல்வாக்கு உள்ள உத்தரப்பிரதேசத்தில், பா.ஜ.க மற்றும் சமாஜவாதி கட்சியை பின்னுக்கு தள்ளி ஆம் ஆத்மி வெற்றிபெற்றுள்ளது பாராட்டுக்குரியது என்றார் அரவிந்த் கெஜ்ரிவால்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியினர் பல இடங்களில் வென்றுள்ளது மக்கள் மாற்றத்திற்கு தயாராகிவிட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது. மக்கள் நல்லாட்சியையும், நல்ல நிர்வாகத்தையுமே விரும்புகிறார்கள் என்றார் கெஜ்ரிவால்.

அடுத்து வரும் உ.பி. மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி முழுவீச்சில் களம் இயங்க தயாராகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்புச் செயலர் சந்தீப் பதக் தலைமையில் மாநிலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் கட்சியை வளர்ப்பதில் கவனம் செலுத்தப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகள் சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவார்கள். அதன் மூலம் கட்சி மேலும் பலப்படும் என்றார் கெஜ்ரிவால்.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிகளுக்கு அதிக பொறுப்பு உள்ளது. நீங்கள் மக்களுக்காக கடுமையாக உழைத்தால் அது மாநிலம் முழுவதும் பரவி கட்சி பலப்படுவதற்கு உதவும். அதன்பிறகு உ.பி. அரசியலில் கட்சி தடம் பதிக்கும் என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com