தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க.வுக்கு கிடைத்த நன்கொடை எத்தனை கோடிகள் தெரியுமா?
2022 ஆம் ஆண்டு வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு மொத்தம் ரூ.9,208 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. இதில் பா.ஜ.க.வுக்கு மட்டும் ரூ.5,270 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. இது மொத்தம் அளிக்கப்பட்ட நன்கொடைகளில் 57 சதவீதமாகும்.
முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கிடைத்துள்ளது என்றாலும் அதற்கு கிடைத்துள்ளது ரூ.964 கோடிதான். அதாவது 10 சதவீதம்தான் கிடைத்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.767 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்துள்ளது. இது மொத்த நன்கொடையில் 8 சதவீதமாகும்.
பா.ஜ.க.வுக்கு 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடையும் நிதியாண்டில் ரூ.1,033 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக கிடைத்துள்ளது. இது 2021 ஆம் ஆண்டைவிட ரூ.22.38 கோடி அதிகமாகும். 2020 ஆம் ஆண்டு பா.ஜ.க.வுக்கு ரூ.2,555 கோடியும், 2019 இல் ரூ.1,450 கோடியும் அக்கட்சிக்கு நன்கொடையாக கிடைத்துள்ளது. 2018 ஆம் நிதி ஆண்டில் ரூ.210 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளதாக அக்கட்சி ஏற்கெனவே தெரிவித்திருந்த்து.
இதேபோல காங்கிரஸ் கட்சிக்கு 2022 நிதி ஆண்டில் ரூ.253 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக கிடைத்துள்ளது. அக்கட்சிக்கு 2021 இல் ரூ.10 கோடி மட்டுமே நன்கொடையாக கிடைத்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் ரூ.317 கோடியும், 2019 இல் ரூ.383 கோடியும் அக்கட்சிக்கு நன்கொடையாக கிடைத்துள்ளது.
திரிணமூலம் காங்கிரஸ் கட்சிக்கு மார்ச் 2022 உடன் முடிவடையும் நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.528 கோடி நிதி கிடைத்துள்ளது. இதுவே 2021 இல் ரூ.42 கோடியும், 2020 இல் ரூ.100 கோடியும், 2019 ஆம் ஆண்டு ரூ.97 கோடியும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக கிடைத்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை வழங்குவதற்கான வழிமுறையாகும். இது ஒரு உறுதிமொழிப் பத்திரம் போன்றது. இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளிலிருந்து இந்தப் பத்திரத்தை வாங்கி, அவர்கள் விரும்பும் எந்த அரசியல் கட்சிக்கும் பெயர் வெளியிடாமல் நன்கொடை அளிக்கலாம்.
தேர்தல் பத்திரத் திட்டம் 2017 ஆம் ஆண்டில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் சட்டப்பூர்வமாக 29 ஜனவரி 2018 அன்று அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்டது.
ஒரு கட்சிக்கு கொடுக்கப்படும் நன்கொடைகள், நன்கொடையாளரின் விவரங்களை வெளிப்படுத்தாமலே கணக்கில் காட்டப்படுவதை உறுதி செய்வதே தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்துவதன் நோக்கம்.
தேர்தல் பத்திரங்கள், கருப்புப் பணத்தை தேர்தல் நிதிக்காகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் ஒரு வழிமுறை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
ஆனால், நன்கொடை அளிப்பவர்களின் அடையாளம் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதால் கருப்பு பணம வரவை ஊக்குவிக்கும் என்று எதிர்பாளர்கள் கூறிவருகின்றனர்.