தேர்தல் ஆணையத்தின் கடிதம் - பன்னீர் பெருமிதம்
அ.தி.மு.கவில் நடைபெறும் தலைமைப் பதவிக்கான போட்டி ஓய்ந்தபாடில்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னரே எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரு வேறு துருவங்களாக இருந்தார்கள். சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஒருங்கிணைப்பாளர் பதவியும் காலாவதியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டது. பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவியும் பறிக்கப்பட்டது.
அன்று முதல், இரு தரப்பும் வெளிப்படையாகவே மோதிக்கொண்டன. அ.தி.மு.கவின் தலைமைச்செயலகம் இருந்த லாயிட்ஸ் ரோடு சண்டைக்களமானது. ஒருவழியாக கட்சி அலுவலகம் எடப்பாடி பழனிசாமி தரப்பின் கட்டுப்பாட்டில் வந்தன. 2021-22-ம் ஆண்டுக்கான அ.தி.மு.க வரவு செலவு கணக்கை இடைக்கால பொதுச்செயலாளர் எனக் கையெழுத்திட்டு, எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தார். அதை கட்சியின் அதிகாரப்பூர்வ வரவு செலவு கணக்காக இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.
எடப்பாடி சமர்ப்பித்த ஆவணங்களின் விபரங்கள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திலும் வெளியிடப்பட்டது. அதில் வருமானவரித்துறை கடிதமும் உண்டு. அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதால், கட்சியின் செலவு கணக்கை ஏற்றுக்கொண்டதோடு எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் என்னும் பதவியையும் ஏற்றுக்கொண்டுவிட்டதாகத்தான் கருத முடியும்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக, தமிழக தேர்தல் ஆணையம் ஒரு கடிதத்தை வெளியிட்டிருக்கிறது. ரிமோட் எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷினின் செயல்பாடுகள் பற்றிய கூட்டம் டெல்லியில் நடக்கவிருப்பதாகவும் இதில் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கடிதம் எழுதியுள்ளார். அதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் பன்னீர் செல்வம் தரப்பு உற்சாகத்தில் மிதக்கிறது. தேர்தல் ஆணையம், பன்னீர் செல்வம் தரப்பையும் அங்கீகரித்திருப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். பன்னீர் செல்வத்தை அங்கீகரித்தது தலைமை தேர்தல் ஆணையமா? தமிழக தேர்தல் ஆணையமா? என்கிற குழப்பம் வந்தது.
இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மத்திய தேர்தல் ஆணையம் வேறு, தமிழக தேர்தல் ஆணையம் வேறு என்கிற ரீதியில் விளக்கம் தந்தது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் விவாதப்பொருளானது. மேல் முறையீடு வழக்கு, உச்சநீதிமன்றதில் நிலுவையில் இருப்பதால் தேர்தல் ஆணையம் எந்தவொரு முடிவையும் எடுக்கக்கூடாது என்பது பன்னீர்செல்வம் தரப்பின் வாதம்.
இரு தரப்பும் கடுமையாக மோதிக்கொள்வதால் அ.தி.மு.க தொண்டர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை வழக்கம் போல் சசிகலா தரப்பும், தினகரன் தரப்பும் கருத்து சொல்லிவிட்டு கடந்து போய்விட்டார்கள். ஆனால், மத்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் செயல்படும் தமிழக தேர்தல் ஆணையம் எப்படி தலைமை அலுவலகத்திற்கு மாறான ஒரு விஷயத்தை மையப்படுத்தி கடிதம் எழுத முடியும்? தேர்தல் ஆணையம்தான் விளக்கவேண்டும்.