பாஜக அரசின் திட்டச் செயல்பாடுகளுக்கு மக்கள் அளித்துள்ள வரவேற்பே தேர்தல் வெற்றியாகும்: பிரதமர் மோடி!
“மூன்று வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ள வெற்றி மக்கள் ஜனநாயகத்தின் மீதும், ஜனநாயக நடைமுறைகள் மீதும் நம்பிக்கை வைத்துள்ளதையே வெளிப்படுத்துகிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நாகாலாந்தில் வெற்றியை பெற்றுள்ளது. நாகாலாந்தில் பா.ஜ.க. மற்றும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. மேகாலயத்தில் தொங்கு சட்டப்பேரவையை தவிர்க்க கூட்டணி ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு தேசிய மக்கள் கட்சி அழைப்புவிடுத்துள்ளது.
தில்லியில் பா.ஜ.க. தலைமையகத்தில் பேசிய மோடி, தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது மக்களுக்கு ஜனநாயக அமைப்புகள் மீதும் ஜனநாயக நடைமுறைகள் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளதையே காட்டுகிறது என்று கூறினார்.
வடகிழக்கு மாநில தேர்தல் முடிவுகள் அந்த மாநில மக்கள் தில்லியிலிருந்து வெகுதூரத்தில் இல்லை என்பதையும், எங்கள் இதயத்தில் இருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது என்றும் மோடி குறிப்பிட்டார்.
வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.வினர் தேர்தல் வெற்றிக்காக கடுமையாக உழைத்துள்ளனர். பல சவால்களை எதிர்கொண்டு வெற்றிக்கனியை பறித்துள்ளனர் என்றார் பிரதமர் மோடி.
திரிபுராவில் பா.ஜ.க –ஐ.பி.எப்.டி. கூட்டணி மொத்தம் உள்ள 60 இடங்களில் 33 இடங்களை வென்றுள்ளது. மேகாலயத்தில் முதல்வர் கான்ராடு சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி அதிக இடங்களில் வென்றிருந்தாலும் தொங்கு சட்டப்பேரவையை தவிர்க்க கூட்டணி ஆட்சிக்கு உதவுமாறு அமித்ஷாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாகாலாந்தில், மொத்தம் உள்ள 60 இடங்களில் பா.ஜ.க.வும் அதன் கூட்டணி கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியும் 37 இடங்களை கைப்பற்றியுள்ளன.
முந்தைய ஆட்சியில் வன்முறை, கலகம் ஆகியவற்றின் பிடியில் சிக்கியிருந்த வடகிழக்கு மாநிலங்களில் வளர்ச்சி என்ற மோடி அரசின் திட்டச் செயல்பாடுகளுக்கு மக்கள் அளித்துள்ள வரவேற்பே தேர்தல் வெற்றியாகும் என்று பா.ஜ.க. கூறியுள்ளது.