குவாலியர் முற்றுகை - தேர்தலுக்கு  தயாராகும் திக்விஜய் சிங்!

குவாலியர் முற்றுகை - தேர்தலுக்கு தயாராகும் திக்விஜய் சிங்!

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலை தொடர்ந்து ராஜஸ்தானிலும், மத்தியப் பிரதேசத்திலும் எப்படியாவது வெல்வது என்று காங்கிரஸ் கட்சி சுறுசுறுப்பாக களத்தில் இறங்கியிருக்கிறது. இரண்டு மாநிலங்களோடு ஒப்பிடும்போது சத்தீஸ்கரில் ஏற்கனவே முன்னணியில் இருப்பதால் காங்கிரஸ் கட்சி நம்பிக்கையோடு களம் காண்கிறது.

அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையேயான மோதல், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. அப்படியொரு நிலை மத்தியப் பிரதேசத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் காங்கிரஸ் தலைமை கவனமாக இருக்கிறது.

இந்நிலையில் மத்தியப் பிரதேசத்து தேர்தல் பணிகளில் முதல் ஆளாக களமிறங்கியிருக்கார், திக் விஜய் சிங். ஏற்கனவே மத்தியப் பிரதேசத்தில் முதல்வராக இருந்த அனுபவத்தின் காரணமாக இம்முறை கர்நாடகத்து சித்தாராமையா போல் மத்தியப் பிரதேசத்தில் உருவாகிவிடமுடியும் என்று நம்பிக்கையோடு இறங்கியிருக்கிறார்.

சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவின் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கும் திக் விஜய் சிங்கிற்கும் நேரடி மோதல் இருக்குமென்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். இருவருமே குவாலியர் / சாம்பர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். காங்கிரஸில இருந்தபோது ஜோதிராதித்யா சிந்தியா, திக் விஜய் சிங்கிற்கு கடும் சவாலாக இருந்தார்.

தற்போது மத்திய அரசில் சிவில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் ஜோதிராதித்யா சிந்தியா, முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதை எதிர்த்து திக் விஜய் சிங் முதல் அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

காங்கிரஸ் தலைமை விரும்பினால், சிந்தியாவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாகவும், எந்த தொகுதியில் நின்றாலும் காங்கிரஸ் சார்பாக எதிர்த்து போட்டியிட்டு வேற்றி பெறுவேன் என்றும் தெரிவித்திருக்கிறார். 2019க்கு முன்பு வரை தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றுள்ள திக் விஜய் சிங், 2019 தேர்தலில் கே.வி யாதவ் என்பவரிடம் தோற்றுப் போனார்.

மதச்சார்பற்ற கட்சி என்னும் பெயரில் இந்துத்துவாவை வெளிப்படையாக எதிர்த்தும், சிறுபான்மையினருக்கு ஆதரவாக நடந்து கொண்டதால் நடுநிலையான இந்துக்களின் கோபத்தை எதிர்கொண்டார். திக் விஜய் சிங்கின் அதிரடி பேச்சுகளை அவரது கட்சிக்காரர்கள் கூட ரசிக்கவில்லை.

மாநிலங்களவை எம்.பியாக இருப்பதால் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ள திக் விஜய் சிங், சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்யப்போவதாக உறுதியளித்திருக்கிறார். சென்றமுறை என்னுடைய ராஜ்கார் தொகுதியில் நிற்பதற்கு பதிலாக மேலிடத்தின் வற்புறுத்தலால் போபால் தொகுதியில் நின்றதால் தோற்றுப்போனதாக விளக்கமளித்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ள 66 தொகுதிகளை தேர்ந்தெடுத்து அங்கு சுற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ளார். களத்தில் பணியாற்றும் காங்கிரஸ் தொண்டர்களை நேரில் சந்தித்து, செய்ய வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கிறார். களத்தில் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றியும் அதற்கான தீர்வுகளையும் பகிர்ந்து கொள்கிறார்.

பா.ஜ.கவில் சேர்வதற்கு முன்பு குவாலியரின் முகமாக சிந்தியாதான் இருந்தார். காங்கிரஸ் கட்சியில் ஏகப்பட்ட கோஷ்டிகள். அதில் சிக்கிக் கொண்டு தவிக்கும் திக் விஜய் சிங், காங்கிரஸ் மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக அதிரடியாக பேசி, முதல்வர் வேட்பாளருக்கான போட்டியில் தன்னை சேர்த்துக் கொள்கிறார் என்கிறது பா.ஜ.க வட்டாரம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com