நான் ஊழல்வாதி என்று நிரூபிக்கப்பட்டால் தூக்கில் போடுங்கள்: பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் சவால்!
மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த ஊழல் வழக்கு தொடர்பாக தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கவந்த தில்லி முதல்வர் கெஜ்ரிவால், மத்திய புலனாய்வு அமைப்புகள் எப்படியாவது தம்மை ஊழல் வழக்கில் சிக்கவைத்து குற்றவாளியாக்க பார்ப்பதாக குற்றஞ்சாட்டினார்.
“நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் தில்லியில் ஊழலற்ற நேர்மையான ஆட்சி நடத்தி வருகிறேன். என் மீது ஊழல் குற்றஞ்சாட்டு வைக்க முயற்சி நடக்கிறது. நான் ஊழல்வாதி என நிரூபிக்கப்பட்டால் என்னை
பொது இடத்தில் தூக்கிலிடுங்கள்” என்று சவால் விட்டுள்ளார்.
மத்திய அரசு சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை மற்றும் போலீஸார் மூலம் எனக்கு அடிக்கடி நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அவர்களின் ஒரே நோக்கம் என்னை ஊழல் வழக்கில் குற்றவாளியாக்குவதுதான்.
நான் ஊழல் செய்பவன் என்றால் உலகத்தில் ஒருவரும் நேர்மையானவர்களாக இருக்க முடியாது. நான் ஒரு பைசா ஊழல் செய்தேன் என்று நிரூபித்தால் என்னை தூக்கிலிடலாம். இப்படி ஒரு நாடகம் நடத்துவதை மோடி அரசு நிறுத்த வேண்டும் என்றார்.
பஞ்சாப் மக்களுக்காக 80 ஆம் ஆத்மி மருத்துவ கிளினிக்குகளை முதல்வர் பகவந்த் மானுடன் சேர்ந்து கெஜ்ரிவால் தொடங்கிவைத்தார். இதுவரை 580 கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த கிளினிக்குகள் மூலம் மக்களுக்கு இலவசமாக தரமான மருத்துவ சிக்ச்சை அளிக்கப்படும் என்று கூறிய கெஜ்ரிவால், பஞ்சாபில் ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே வளர்ச்சிப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றார்,
கடந்த 75 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் மக்களை கொள்ளையடித்து வந்தார்கள். ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த பின்னர்தான் வளர்ச்சி திட்டங்கள்
செயல்படுத்தப்படுகின்றன. ஆம் ஆத்மி அரசின் நல்லாட்சியைக் கண்டு எதிர்க்கட்சியினர் மிரண்டுபோயுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சி குறுகிய காலத்திலேயே ஒரு தேசிய கட்சியாக வளர்ச்சி அடைந்துள்ளது என்றார் கெஜ்ரிவால்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் பகவந்த் சிங் மான் பேசுகையில் ஆம் ஆத்மி மருத்துவ கிளினிக்குகள் மூலம் இதுவரை 25.63 லட்சம் நோயாளிகள் பலனடைதுள்ளனர். நோயாளிகள், அவர்களுக்கான நோய்களின் தன்மை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் பற்றி அரசு அறிந்துகொண்டு செயல்பட இத்தகைய கிளினிக்குகள் உதவி வருவதாக குறிப்பிட்டார்.