அதிமுக என்னும் கடலில் கல் வீசினால், கல்தான் காணாமல் போகும் - பா.ஜ.கவுக்கு பன்ச் வைத்த ஜெயக்குமார்!

அதிமுக என்னும் கடலில் கல் வீசினால், கல்தான் காணாமல் போகும் - பா.ஜ.கவுக்கு பன்ச் வைத்த ஜெயக்குமார்!

அதிமுக - பாஜக இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பா.ஜ.க தரப்பிலிருந்து அ.தி.மு.கவுக்கு தாவுவதும், அ.தி.முகவிலிருந்து பா.ஜ.கவுக்கு தாவுவது என இரு தரப்பிலும் அரசியல் நடவடிக்கைகள் களைகட்டுகின்றன. பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார், அ.தி.மு.கவுக்கு வந்ததை தொடர்ந்து, பா.ஜ.கவின் ஐ.டி அணி ஆட்டம் கண்டுள்ளது என்கிறார்கள்.

திராவிட கட்சிகளில் இருந்து ஆட்களை அழைத்து தேசியக் கட்சியை நடத்துவதாக சொல்லி வந்தார்கள். இப்போது பா.ஜ.கவை நம்பி திரவிடக் கட்சிகள் அரசியல் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார், கூடவே தன்னை கருணாநிதியோடும், ஜெயலலிதாவோடும் ஒப்பிட்டிருந்தார். இது அ.தி.மு.க வட்டாரத்தில் சலசலப்பை கிளப்பியிருக்கிறது.

நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஜெயக்குமார், கல் வீசினால் உடைய அதிமுக ஒன்றும் கண்ணாடி அல்ல. அதிமுக என்பது ஒரு கடல். அதில் கல் வீசினால் கல் தான் காணாமல் போகும் ஆனால், கடல் இருந்து கொண்டே இருக்கும். அலைகள் வரத்தான் செய்யும் என்று தத்துவார்த்தமாக பேசினார்.

பா.ஜ.கவிலிருந்து அ.தி.முகவினருக்கு கட்சி மாறுபவர்கள் குறித்து கேள்வி கேட்டபோது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மிகப்பெரிய எழுச்சி பெற்றுள்ளது. இதனால் அதிமுகவில் பலர் விருப்பப்பட்டு சேர்கிறார்கள். விருப்பப்பட்டு சேரும்போதும் அதை அரசியல் ரீதியில் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அனைவருக்கும் இருக்க வேண்டும். நான் யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை என்றார்.

எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பா.ஜ.கவினர் தீ வைத்து எரித்தது குறித்து கருத்து தெரிவித்த ஜெயக்குமார், இதை அக்கட்சியின் தலைவர் கட்டுப்படுத்த வேண்டும். எங்கள் கட்சியில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். அவர்கள் கிளர்ந்து எழுந்தால் என்னவாகும்? இது கண்டனத்திற்குரிய விஷயம். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டித்து பாஜக கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.

ஜெயலலிதா போல் ஒருவர் இனி பிறக்கப்போவது இல்லை. செஞ்சிக்கோட்டை ஏறுபவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது. மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் கிடையாது. கட்சித் தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டால் அதை சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்கள் கட்டுப்படுத்த வேண்டும்.

நான்கு ஆண்டுகாலம் 420 ஆட்களாக வலம் வந்தவர்கள் என்று சில பா.ஜ.கவினர் அ.திமு.கவினரை இணையத்தில் விமர்சனம் செய்திருப்பதை பற்றி குறிப்பிட்டபோது, முகவரி இல்லாதவர்கள் சொல்லவதற்கெல்லாம் விலாசம் கொடுக்க விரும்பவில்லை என்றார், காட்டமாக.

அ.தி.மு.க - பா.ஜ.க மோதல் உச்சத்திற்கு சென்றிருக்கிறது. கூடிய விரைவில் கூட்டணி உடைந்து போகலாம் என்கிறார்கள், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள். இதற்குத்தானே ஆசைப்பட்டார்கள்?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com