ஜூன் 12 எதிர்க்கட்சி கூட்டணி ஆலோசனை கூட்டம்: 16 கட்சிகள் பங்கேற்க உறுதி!

ஜூன் 12 எதிர்க்கட்சி கூட்டணி ஆலோசனை கூட்டம்: 16 கட்சிகள் பங்கேற்க உறுதி!

பா.ஜ.க.வுக்கு எதிரான தேர்தல் உத்திகளை வகுக்கும் எதிர்க்கட்சி கூட்டணிகளின் கூட்டம் வருகிற 12 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் 16 அரசியல் கட்சிகள் பங்கேற்பை உறுதிசெய்துள்ளன.

பா.ஜ.க.வுக்கு எதிராக ஐக்கிய முன்னணியை உருவாக்குவது குறித்தும், மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை ஒன்றாக எதிர்கொள்வதற்கான தேர்தல் உத்திகள் குறித்தும் வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி பாட்னாவில் கூடி விவாதிக்க முடிவு செய்துள்ளதாகவும் சமீபத்தில் பிகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பா.ஜ.க.வுடனான உறவை துண்டித்து காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் சிறிய கட்சிகளுடன் சேர்ந்து மகா கூட்டணி அமைத்து பிகாரில் ஆட்சியமைத்த நிதிஷ்குமார், இப்போது பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பா.ஜ.க.வுக்கு எதிரான அணியில் தற்போது 18 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் சில கட்சிகள் தங்கள் அணியில் சேரக்கூடும் என்றும் ஜூன் 12 ஆம் தேதி நடைபெறும் கூட்டம் தேர்தலுக்கான ஆயத்த கூட்டமாக இருக்கும் என்றும் பிரதான கூட்டம் பின்னர் நடைபெறும் என்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

1970-களில் காங்கிரஸ் அரசுக்கு எதிரான புரட்சிகர இயக்கத்தை சோஷலிஸ்ட் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் பாட்னாவில்தான் தொடங்கினார். அதேபோல பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அடங்கிய ஐக்கிய முன்னணியின் கூட்டத்தை பாட்னாவில்தான் தொடங்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.

மேலும் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் இயக்கத்தை போல எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தை பிகாரில் தொடங்கலாம். அடுத்த கூட்டத்தை எங்கு வைத்துக்கொள்வது என்பது பற்றி பின்னர் முடிவு செய்யலாம். நாம் ஓரணியாக உள்ளோம் என்பதை முதலில் வெளிப்படுத்துவோம் என்பதுதான் மம்தா பானர்ஜியின் கருத்தாகும்.

கடந்த வாரம் கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்ற பின் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தியிடமும் புதிதாக பேச்சு நடத்தியுள்ளார் நிதிஷ்குமார்.

முன்னதாக ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனை உத்தவ் பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரையும் நிதிஷ்குமார் சந்தித்து வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தியிருந்தார்.

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவாக ஒரு வேட்பாளரை மட்டும் நிறுத்த வேண்டும் என்கிற நிதிஷ்குமாரின் யோசனையை மம்தா பானர்ஜி ஏற்றுக்கொண்டுள்ளார். அப்படிச் செய்தால் குறைந்தபட்சம் 475 தொகுதிகளில் பா.ஜ.க.வை நேரடியாக எதிர்கொள்ள முடியும் என்பது நிதிஷ்குமாரின் கருத்தாகும்.

இந்த நிலையில் வருகிற 12 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் 16 அரசியல் கட்சிகள் பங்கேற்பை உறுதிசெய்துள்ளன.

ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், பிகார் முதல்வருமான நிதிஷ்குமார், பாட்னாவில் ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில், ஏற்கெனவே ஒப்புக்கொண்ட பணிகள் காரணமாக பங்கேற்க முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகள் கூட்டணியின் இந்த கூட்டத்தை வருகிற 23 ஆம் தேதிக்கு ஒத்திக்க வைக்குமாறு காங்கிரஸ் கோரியது. ஆனால், அனைவருக்கும் பொதுவான ஒரு தேதியை நிர்ணயிப்பது சற்று கஷ்டமான காரியம் என்பதால் திட்டமிட்டபடி ஜூன் 12 ஆம் தேதி கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் இந்த கூட்டத்தில் பங்கேற்க மூத்த தலைவர் ஒருவரை அனுப்பிவைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதனிடையே எதிர்க்கட்சி கூட்டணியில் உண்மையிலேயே காங்கிரஸ் கட்சிக்கு அக்கறை இருக்குமானால் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களில் ஒருவரை இதில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்தக் கூட்டத்தில் பங்கேற்காவிட்டாலும், மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, அவரது கட்சியைச் சேர்ந்த அபிஷேக் பானர்ஜி, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர்.

2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

பா.ஜ.க.வை எதிர்கொள்ள வேண்டுமானால் முக்கிய எதிர்க்கட்சிகள் தில்லியிலோ அல்லது வேறு நகரத்திலோ நான்கு அல்லது ஐந்து நாள் கூடிப்பேசி ஒருமித்த நிலைப்பாடை எடுக்க வேண்டும். அதன் பின் நேருக்கு நேர் அல்லது குழுவாக பேசி முடிவுக்கு வரலாம் என்று எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிதிஷ்குமார் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவிடம் காங்கிரஸ் கூறியிருந்த்து குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com