ஊழல் வழக்கில் சிக்கிய கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. கைது!

ஊழல் வழக்கில் சிக்கிய கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. கைது!

பா.ஜ.க.வின் விருபாக்க்ஷா தாவண்கரே மாவட்டம், சென்னகிரி தொகுதி எம்.எல்.ஏ. இவர் அரசுதுறை நிறுவனமான கர்நாடக சோப்ஸ் அண்ட் டிடெர்ஜென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவரது மகன் பிரசாந்த், பெங்களூர் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தில் பணியாற்றி வந்தார்.

கடந்த மார்ச் 2 ஆம் தேதி மடல் விருபாக்க்ஷாவின் மகன் பிரசாந்த், கர்நாடக சோப்ஸ் நிறுவனத்துக்கு மூலப்பொருள் சப்ளை செய்யும் ஒருவரிடம் பேரம் பேசி ரூ.81 லட்சம் லஞ்சம் கேட்டு அதில் ரூ.40 லட்சத்தை வாங்கும்போது லோக் ஆயுக்த போலீஸாரால் கையும் களவுமாக பிடிபட்டார். அதைத் தொடர்ந்து நடந்த சோதனையில் அவரது அலுவலகத்தில் ரூ.2.2 கோடியும், அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது ரூ.6.1 கோடியுமாக மொத்தம் ரூ.8.23 கோடி கைப்பற்றப்பட்டது. இவை தவிர பெருமளவு தங்க நகைகள், வெள்ளி பொருள்களும் பிடிபட்டது. நிலத்தில் முதலீடு செய்ததற்கான பத்திரங்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில் ஊழல் வழக்கில் சிக்கிய கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. மடல் விருபாக்க்ஷா, நேற்று கைது செய்யப்பட்டார். மாநில உயர்நீதிமன்றம் அவரது ஜாமீன் கோரிக்கையை நிராகரித்ததை அடுத்து அவரை லோக் ஆயுக்த போலீஸார் கைது செய்தனர்.

சென்னகிரி தொகுதி எம்.எல்.ஏ.வான அவர், தும்கூரு மாவட்டம் கியாத்சந்த்ரா என்னுமிடத்தில் சுங்கச்சாவடி அருகே கைது செய்ய்ப்பட்டார். பின்னர் அவர் விசாரணைக்காக பெங்களூர் அழைத்து வரப்ப்ட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

முன்னதாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.நடராஜன், விருபாக்க்ஷப்பாவின் ஜாமீன் மனுவை நிராகரித்தார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் முதல் குற்றவாளியாக இருப்பதால் அவரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தபோது அவரிடமிருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. ஆனால், இப்போது அவரது வீட்டில் நகைகளும், ரொக்கம், நிலப்பத்திரங்கள் கைப்பற்றப்பட்டிருப்பது மனுதாரர் லஞ்ச ஊழலில் ஈடுபட்டிருப்பதற்கான ஆதாரங்களாக இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி கூறினார்.

என்மீது கூறப்பட்டுள்ள புகார் அர்த்தமில்லாத்து. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று விருபாக்க்ஷா கூறிவந்ததாக ஊழல் தடுப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். அவரது முன்ஜாமீன் மனுவை விசாரிக்கும் வரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.

இப்போது அதுவும் ரத்துச் செய்யப்பட்டு விட்டது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

“எனது அரசியல் வாழ்க்கையில் கரும்புள்ளி ஏற்பட்டுள்ளது. சதித் திட்டத்தின் ஒருபகுதியே என்மீதான ஊழல் குற்றச்சாட்டு. இதிலிருந்து விடுபட்டு நான் நேர்மையானவன் என்பதை நிரூபிப்பேன்” என்று விருபாக்க்ஷா, ஜாமீன் நிராகரிக்கப்பட்ட பின்னர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com