இடஒதுக்கீட்டை கையிலெடுத்த கர்நாடக பா.ஜ.க; வலுக்கும் எதிர்ப்பு; ஓ.பி.எஸ் போல் மௌன சாட்சியான எடியூரப்பா!

இடஒதுக்கீட்டை கையிலெடுத்த கர்நாடக பா.ஜ.க; வலுக்கும் எதிர்ப்பு; ஓ.பி.எஸ் போல் மௌன சாட்சியான எடியூரப்பா!

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஜாதிக் கணக்குகள் தீவிரமாகியிருக்கின்றன. 2021ல் தமிழ்நாட்டில் எடப்பாடி அரசு செய்த 10.5 இடஒதுக்கீடு அறிவிப்புபோல் கடைசிநேரத்தில் பல தடாலடி அறிவிப்புகளில் பா.ஜ.க அரசு இறங்கியிருக்கிறது. அதன் விளைவாக கடுமையான எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் பட்டியலின சமூகத்திற்கான இடஒதுக்கீடு தொடர்பாக பா.ஜ.க அரசு தன்னுடைய முடிவுகளை அறிவித்திருககிறது. பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு, கல்வி மற்றும் வேலைகளில் பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை மாற்றியமைத்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது.

கர்நாடகவில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர்கள் 24 சதவீதம் இருக்கிறார்கள். 2 பி பிரிவில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு கிடைத்து வந்தது. இதிலிருந்து முஸ்லிம்களை நீக்கவும் மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, முஸ்லிம் தலைவர்களும் கோபத்தில் இருக்கிறார்கள். வொக்கலிகர்கள் மற்றும் வீரசைவ லிங்காயத்துகளுக்கு 4 சதவீதத்தை பிரித்து கொடுக்கவும் மாநில பா.ஜ.கவினர் முடிவு செய்திருக்கிறது.

கர்நாடக அரசின் முடிவை எதிர்த்து பஞ்சாரா சமூகத்தினர் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுத்தால் நமக்கான வாய்ப்பு குறைந்துவிடும் என்று பிற சமூகங்கள் எதிர்ப்பு தெரிவித்தது போன்ற நிலைமை கர்நாடக அரசியலில் ஏற்பட்டிருக்கிறது. இடஒதுக்கீட்டு சதவீதத்தை பிரித்ததால் தங்கள் சமூகத்தினருக்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக பஞ்சாரா சமூகத்தினர் நினைக்கிறார்கள்.

ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் வீட்டை முற்றுகையிட்டு ஏராளமானோர் போராட்டத்தில் இறங்கினார்கள். இதில் வன்முறை வெடித்தது. எடியூரப்பாவின் சொந்த ஊரான ஷிகாரிபுராவில் உள்ள வீட்டின் மீது கற்கள் வீசப்பட்டன. காவல்துறையின் தடுப்புகளை தாண்டி முன்னேற நினைத்தவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பரபரப்பு ஏற்பட்டது.

பஞ்சாரா சபாஜ் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அவரது வீட்டில் இருந்த பாஜக கொடியை அகற்றிவிட்டு பஞ்சாரா சமூகத்தினர் கொடியை ஏற்றினர். பின்னர் எடியூரப்பா, முதல்வர் பசவராஜ் உள்ளிட்டோரின்

கொடும்பாவி கொளுத்தப்பட்டது. அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும், அமைதியை நிலைநாட்டவும் ஷிகாரிபூர் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பரிந்துரையை மாநில அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பது பஞ்சாரா சமூகத்தவர்களின் கோரிக்கை. தேர்தல் கணக்குகளை மனதில் கொண்டு பா.ஜ.க அரசு முன்வைத்த திட்டம், தற்போது பா.ஜ.கவுக்கு எதிராக திரும்பியிருக்கிறது. 10.5 சதவீத இட ஒதுக்கீட்டால், தென் தமிழ்நாட்டில் அ.தி.மு.கவுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் கிடைக்காமல் போனது.

இரட்டைத் தலைமையில் செயல்பட்டுக்கொண்டிருந்த அ.தி.மு.கவில் விரிசல் ஆரம்பித்து, கட்சித் தலைமையை கைப்பற்றும் போட்டி இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்று அ.தி.மு.கவுக்கு நடப்பது, நாளை கர்நாடக பா.ஜ.கவுக்கு நேராது என்று சொல்லிவிடமுடியாது என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com