கர்நாடகா தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு!

கர்நாடகா தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு!

கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை நிறைவடைகிறது. இதன் காரணமாக பெங்களூர் வந்துள்ள அனைத்துக்கட்சித் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று மாலை வெளியிடப்படுகிறது.

பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் பெங்களூரில் முகாமிட்டு மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார்கள். பிரதமர் மோடி நேற்று பெங்களூரில் நடந்த பிரம்மாண்டமான ஊர்வலத்தில் கலந்து கொண்டார். 26 கிலோ மீட்டர் வரை திறந்த வாகனத்தில் சென்று பா.ஜ.கவுக்கு வாக்குகள் சேகரித்தார். எப்போதுமில்லாத அளவுக்கு டெல்லியிலிருந்து ஏராளமான பா.ஜ.க நிர்வாகிகள் இம்முறை பிரச்சாரத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கர்நாடகத்தில் முகாமிட்டு சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். பதவி நீக்கத்திற்கு காரணமாக இருந்த அதே கோலார் தொகுதியில் சென்ற மாதம் பிரச்சாரத்தை ஆரம்பித்த ராகுல் காந்தி, கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சாரத்தை நிறைவு செய்திருக்கிறார்.

ஜனதாதளம் கட்சியைப் பொறுத்தவரை குமாரசாமியும், முன்னாள் பிரதமர் தேவகௌவுடாவும் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் பி டீம் ஆக ஜனதா தளம் கட்சி செயல்பட்டு வருகிறது என்று பா.ஜ.க மேற்கொள்ளும் பிரச்சாரத்தை எதிர்கொள்ளவேண்டிய இடத்தில் ஜனதா தளம் இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று மாலைக்கு பின்னர் எந்தவிதத்திலும் பிரச்சாரம் அனுமதிக்கப்படாது என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. பொதுவாக வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு 2 நாட்களுக்கு முன்னர் கருத்துக் கணிப்புகளை வெளியிட தடை செய்யப்படும்.

அதன்படி இன்று மாலை 6 மணிக்கு பின்னர் ஊடகங்களில் கருத்துக் கணிப்புகளை வெளியிடுவதோ, பிரச்சாரம் செய்வதோ தடை செய்யப்பட்டுள்ளது. ஊடகங்களில் பிரச்சாரம் தொடர்பாக வீடியோ, விவாதம், உரையாடல் ஆகியவற்றை டி.வி சேனல்கள், ஊடகங்கள், ஆன்லைன் சேனல்கள், சமூகவலைத்தளங்களில் வெளியிடக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 125-ன் கீழ் கருத்துக்கணிப்புகளை வெளியிடுவது தடை செய்யப்படுகிறது. இதையும் மீறி தேர்தல் முடிவை பாதிக்கும்

வகையில் செய்தி வெளியிட்டால் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126-வது பிரிவின் படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆகவே, இன்று மாலைக்குள் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புக்கள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com