கர்நாடக தேர்தல்: 3,632 வேட்பாளர்கள் 5,102 இடங்களில் மனுதாக்கல்!
கர்நாடகத்தில் வரும் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 3,600 வேட்பாளர்கள் 5,102 இடங்களுக்கு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை அடுத்து கடந்த 13 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நடைமுறை தொடங்கியது. மொத்தம் உள்ள இடங்களில் 4,710 இடங்களுக்கு 3,327 ஆண் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். 391 இடங்களுக்கு 304 பெண் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். ஒரே ஒருவேட்புமனு மூன்றாம் பாலினத்தவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கர்நாடக மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மொத்த வேட்புமனுக்களில் 707 மனுக்கள் பா.ஜ.க.வினரும், 651 மனுக்களை காங்கிரஸ் கட்சியினரும், 455 மனுக்களை மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியினரும் தாக்கல் செய்துள்ளனர். இதர மனுக்கள் வேறு சில கட்சியினர் மற்றும் சுயேச்சைகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரு வேட்பாளர் அதிகபட்சம் நான்கு இடங்களுக்கு மனுதாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கலுக்கான கடைசிநாளான வியாழக்கிழமை 1934 மனுக்கள், 1691 வேட்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பிரபலங்களும் அடங்குவார்கள்.
வேட்பு மனு தாக்கல் செய்யும் கெடு முடிவடைவதற்கு சற்று முன்னதாக யாரும் எதிர்பாராத வகையில் பெங்களூர் ஊரகத் தொகுதி காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் கனகபுரா சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். இந்த தொகுதியில் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக அதன் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். ஒருவேளை டி.கே.சிவகுமாரின் மனு ஏதோ ஒரு காரணத்தால் நிராகரிக்கப்பட்டால் அதை சரிசெய்யும் நோக்கில் டி.கே.சுரேஷ் மனு தாக்கல் செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹஸ்ஸன் தொகுதியில் ஹெச்.பி.ஸ்வரூப் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி வேட்பாளராக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். இவர் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் முக்கிய தலைவருமான ஹெச்.டி.தேவெகெளடவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷிவமொக்கா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் சென்னபசப்பா போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். இவர் அந்த தொகுதியில் போட்டியிடுவது கடைசி நேரத்தில்தான் இறுதி செய்யப்பட்டது. கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான ஈஸ்வரப்பா முன்னிலையில் இவர் மனு தாக்கல் செய்துள்ளார். அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார்.
சுயேச்சை எம்.பி.யான சுமலதா அம்பரீஷ் மற்றும் அமைச்சர் சி.என்.அஸ்வத் நாராயணன் ஆகியோர் புடைசூழ மாண்டியா தொகுதியில் அசோக் ஜெயராம், பா.ஜ.க. சார்பில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். காங்கிரஸ் செயல் தலைவர் சதீஷ் ஜர்கிஹோலி, பெலகாவி மாவட்டம், யெமகன்ம்மார்டி தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். அமைச்சர் சசிகலா ஜோலி, தாம் வழக்கமாக போட்டியிடும் நிப்பானி தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தார். அப்போது மத்திய அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி உடன் இருந்தார்.
பா.ஜ.க.வின் எம்.பி.ரேணுகாச்சார்யா (ஹொன்னாலி), கட்டா ஜெகதீஷ் (ஹெப்பல்) மற்றும் ராமச்சந்திர கெளட (சிட்லகட்டா) மற்றும் காங்கிரஸ் கட்சியின் ராமநாத ராய் (பன்ட்வால்) மற்றும் யோகேஷ் (ஷிவமொக்கா) ஆகியோரும் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் வெள்ளிக்கிழமை இறுதிசெய்யப்படும். வேட்புமனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 24 கடைசிநாளாகும்.