நட்சத்திர விடுதியில் பிரேக்பாஸ்ட் சாப்பிட்டபடி, காங்கிரஸ் முக்கிய புள்ளிகளுடன் கார்கே டிஸ்கஷன்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்திருந்த மல்லிகார்ஜுன கார்கே, பிரபல தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில், தமிழக காங்கிரஸ் முக்கியப் புள்ளிகளுடன் பிரேக் பாஸ்ட் சாப்பிட்டபடி, டிஸ்கஷன் நடத்தியிருக்கிறார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மிகப்பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்ற நிலையில், இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சென்னையில் கூடினர். இதில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலினை வாழ்த்திப் பேச வந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கிறார்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முக்கியப் புள்ளிகளுக்கு காலை பிரேக் பாஸ்ட் விருந்து கொடுத்தார். அதில் நாடாளுமன்றத் தேர்தல், கூட்டணி, ஓட்டு வங்கி குறித்த பல விஷயங்களைப் பேசியபடி, காலை டிபனை முடித்தார். இப்போதைய இடைத்தேர்தல் முடிவுகள் குறித்தும் கார்கேவுக்கு எடுத்துக் கூறப்பட்டது.
இட்லி, பூரி, மெதுவடையை விரும்பி என தென்னிந்திய உணவை விரும்பி சாப்பிட்டபடியே, மல்லிகார்ஜுன கார்கே அனைத்து முக்கிய விஷயங்களையும் பேசி முடித்துவிட்டார்.
பின்னர் மதியம் சமூக செயற்பாட்டாளர்களை மல்லிகார்ஜுன கார்கே சந்தித்து பேசியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவரான பிறகு அவர் முதல் முறையாக தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதால் நிர்வாகிகளை சந்திப்பதற்காக சென்னையில் ஒரு நாள் முகாமிட்டிருக்கிறார்.

முக்கிய புள்ளிகள் சந்திப்பில் கார்த்தி சிதம்பரம், செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, விஜய் வசந்த், பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன், கே.எஸ்.அழகிரி, உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் இதில் கலந்துகொண்டனர். கடந்தாண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடந்தபோது, கார்கேவை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூரை ஆதரித்த கார்த்தி சிதம்பரம், இன்றைய விருந்தில் கார்கே அருகே முதல் ஆளாக அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.