ஹீரோவாக உள்ள பா.ஜ.கவை ஜீரோ ஆக்குவோம் - மம்தா தலைமையில் மறுபடியும் சூடுபிடிக்கும் மூன்றாவது அணி பேச்சுவார்த்தைகள்!

ஹீரோவாக உள்ள பா.ஜ.கவை ஜீரோ ஆக்குவோம் - மம்தா தலைமையில் மறுபடியும் சூடுபிடிக்கும் மூன்றாவது அணி பேச்சுவார்த்தைகள்!

மாநிலக்கட்சிகளின் தலைவர்கள் ஒன்று கூடி பேசினால் தேசிய அளவில் பா.ஜ.கவுக்கு எதிராக ஓரணி அமைப்பதற்கான முயற்சிகளோ என்று செய்திகள் வருவது வழக்கம்தான். அதற்கேற்ப கடந்த சில மாதங்களில் சந்திரசேகர் ராவ், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டவர்கள் பிற மாநிலக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து, கூட்டணி தொடர்பாக பேசுவதாக தெரிவித்தார்கள்.

இந்நிலையில் ராகுல் காந்தியின் பதவி நீக்கம், எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட உதவியது. பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையேயான நேரடி மோதலில் தாங்கள் யார் பக்கம் இருப்பது என்பதை மாநிலக்கட்சிகள் முடிவு செய்தார்கள். பெரும்பாலான மாநிலக்கட்சிகள் ராகுல் காந்தியை ஆதரித்து நிலையில் இனி காங்கிரஸ் கட்சியை தவிர்க்க முடியாது என்கிற நிலை உருவானது.

பதவி நீக்கத்திற்கு முன்பு வரை ராகுல் காந்தியை பற்றி பேசாமல் இருந்த மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால், சந்திரசேகர் ராவ் போன்றவர்கள் வயநாடு எம்.பி பதவியை இழந்த விஷயத்திலும், அதானிக்கு எதிராக ராகுல் காந்தியின் அதிரடி அரசியலிலும் துணை நின்றார்கள். காங்கிரஸ் அல்லாத கூட்டணி, நேர விரயம் என்று தி.மு.க தலைவர் கூட கருத்து தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜியை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது மூன்றாவது அணி அமைக்கப்படவேண்டியது குறித்து பேசப்பட்டது. ஏற்கனவே மம்தா பானர்ஜியை சந்தித்து அகிலேஷ் யாதவ் பேசியிருந்த நிலையில் நிதிஷ் குமார் உடனான சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்றது.

சந்திப்புக்கு பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சிகள் ஒன்றாக அமர்ந்து பேசி பா.ஜ.கவுக்கு எதிராக வியூகம் வகுக்க வேண்டும். முதலில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஊடகங்களின் ஆதரவால் ஹீரோவாக உள்ள பா.ஜ.க தேர்தலில் ஜீரோ ஆக வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து கூட்டாக எதிர்கொள்ள தயாராகின்றன. இதில் காங்கிரஸ் கட்சி இடம்பெறுமா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. காங்கிரஸ் இடம்பெற்றால் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் சேரும். யார் சேருவார், யார் விலகுவார் என்கிற அரசியல் கணக்குகளுக்கு பின்னரே கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பற்றி அலச முடியும்.

நேற்று கூட்டணி குறித்து பேசிய மம்தா பானர்ஜியிடம் காங்கிரஸ் கட்சி இடம்பெறுமா என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, அனைத்துக் கட்சிகளும் இடம்பெறும் என்று பதிலளித்தார். நிதிஷ் குமாரிடம் ஒரேயொரு கோரிக்கை மட்டும் வைத்துள்ளேன். ஜெயப்பிரகாஷ்ஜியின் ஊழலுக்கு எதிரான இயக்கம் இயக்கம் பீகாரில் இருந்துதான் தொடங்கியது. அதைப்போல பீகாரில் அனைத்து

கட்சி கூட்டம் நடத்தினால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யலாம் என்றார்.

அடுத்து பேசிய நிதிஷ்குமார், வரும் தேர்தலில் ஓரணியின் நின்று போராட அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம் என்றவர், தேசத்தின் வளர்ச்சிக்காக பா.ஜ.க எதையும் செய்யவில்லை என்றார். ஆக, பா.ஜ.கவை எதிர்ப்பது என்கிற புள்ளியில் அனைத்து எதிர்க்கட்சிகளும் தெளிவாக இருக்கின்றன. ஆனால், அதை எப்படி செயல்படுத்துவது என்பதில்தான் குழப்பம் நீடிக்கிறது.

மம்தா பானர்ஜியும் நிதிஷ் குமாரும் தயாராக இருந்தால் போதாது. அகிலேஷ் யாதவ், நவீன் பட்நாயக், சந்திரசேகர் ராவ் உள்ளிட்டவர்களும் பா.ஜ.கவுக்கு எதிராக கூட்டணியில் இணைய வேண்டும். வலுவான கூட்டணியாக அமைய இடதுசாரிகளையும், காங்கிரஸ் கட்சியையும் கூட்டணிக்குகள் கொண்டு வரவேண்டும். அதை யார் முன்னெடுப்பார் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com