அஜீத் பவார் சொல்வதை கேளுங்க! இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் போட்டியிட அனுமதி கூடாது!
ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு எந்த சலுகைகளும் வழங்கக்கூடாது. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அவர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
பாராமதியில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அஜித் பவார், மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்திவிட்டதை சுட்டிக்காட்டினார்.
“நாடு சுதந்திரம் பெற்றபோது நம் நாட்டின் மக்கள் தொகை 35 கோடியாக இருந்தது. இப்போது மக்கள் தொகை 142 கோடியாக அதிகரித்துள்ளது. அதற்கு நாம்தான் காரணம் என்று எனது தாத்தா என்னிடம் அடிக்கடி கூறுவார்” என்று அஜித் பவார் குறிப்பிட்டார்.
அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த விவகாரத்தை முக்கிய விஷயமாக கருத்தில் கொள்ள வேண்டும்.
நமது நாடு, மாவட்டம், பிராந்தியத்தின் நலன் கருதி ஒவ்வொருவரும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக்கூடாது.
இனி இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு எந்த சலுகைகளும் கிடையாது என்று அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விலாஸ்ராவ் தேஷ்முக் முதல்வராக இருந்தபோது மூன்று குழந்தைகளுக்கு மேல் இருந்தால் கிராமப் பஞ்சாயத்து, ஜில்லா பரிஷத், தாலுகா பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற முடிவை எடுத்திருந்ததாக அஜீத் பவார் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்ற ஒரு முடிவை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்திலும் ஏன் எடுக்க்க்கூடாது என்று மக்கள் கேட்கிறார்கள். நான் அவர்களிடம் இது நம்கையில் இல்லை. இது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றேன். இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கையாகும்.
இதை பரிசீலித்து முடிவு செய்ய வேண்டியது மத்திய அரசுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது என்று அறிவித்தால்தான் மக்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.