காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி - விரைவில் டீஸர் வெளியீடு!

காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி - விரைவில் டீஸர் வெளியீடு!

பா.ஜ.கவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காக காங்கிரஸ் தலைமையில் தேசிய அளவில் ஒரு புதிய கூட்டணி அமைக்கப்படும் என்றும் அதில் ஏராளமான மாநிலக்கட்சிகள் இடம்பெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. பெரிய அளவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கான தேதியும், இடமும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்பட இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற மாபெரும் வெற்றி, எதிர்க்கட்சிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதுவரை காங்கிரஸ் கட்சியிடம் நெருக்கம் காட்டாத நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி உள்ளிட்டவர்கள் கூட காங்கிரஸ் தலைமையில் ஒரு புதிய கூட்டணியை அமைக்க முன்வந்திருக்கிறார்கள். சித்தாராமையா பதவியேற்கும் நிகழ்வில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கலந்து கொண்டது ஒரு புதிய கூட்டணிக்கு அச்சாரமாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் தேசியத்தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நேரில் சந்தித்து கூட்டணி பற்றி பேசினார். பின்னர் கார்கேவுடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிஷ்குமாரின் சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால், ஓரிரு நாட்களில் கூட்டத்திற்கான நாள் மற்றும் இடம் பற்றிய விவரங்கள் வெளியிடப்படும். இந்த கூட்டத்தில் பெரிய எண்ணிக்கையிலான எதிர்க்கட்சிகள் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் நடவடிக்கையில், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு கட்சித்தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். முதலில் மம்தா பானர்ஜியை சந்தித்து இது குறித்து பேசியவர், பின்னர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார். பா.ஜ.கவுக்கு எதிராக உள்ள வட இந்திய தலைவர்களை ஓரணியில் கொண்டுவருவதில் நிதிஷ்குமார் தீவிரம் காட்டுவதாக தெரிகிறது.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை நாட்டின் நலனுக்காகவே செய்வதாகவும், தனிப்பட்ட லட்சியம் எதுவுமில்லை என்று நிதிஷ்குமார் விளக்கமளித்திருக்கிறார். ஏற்கனவே 2024 பிரதமர் வேட்பாளராக தான் போட்டியிடப்போவதில்லை என்பதையும் தெளிவாக அறிவித்துவிட்டுதான் ஒருங்கிணைக்கும் பணிகளை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்களையும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார். நவீன் பட்நாயக் தவிர மற்ற மாநிலக்கட்சிகளின் தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு இணக்கமான பதில்களையே அளித்திருக்கிறார்கள்.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு

தரப்பட்டிருப்பதாகவும், கூடிய விரையில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்போவதாகவும் தி.மு.கவினர் தெரிவித்திருக்கிறார்கள். ஒருவேளை காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி அமைக்கப்பட்டுவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரமும் உடனே ஆரம்பமாகிவிடும்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com