புதிய நாடாளுமன்றம் யோசனையை முன்வைத்தவர் நரசிம்மராவ்: குலாம்நபி ஆசாத்!

புதிய நாடாளுமன்றம் யோசனையை முன்வைத்தவர் நரசிம்மராவ்: குலாம்நபி ஆசாத்!

நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் ஆட்சியில் அவரால் தெரிவிக்கப்பட்ட யோசனைதான். ஆனால், ஏனோ அது கிடப்பில் போடப்பட்டுவிட்டது என்று ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.

ஆனாலும், இப்போது நாடாளுமன்றத்துக்கு புதிய வளாகம் கட்டப்பட்டுள்ளது ஒரு நல்ல விஷயம்தான் என்று அவர் குறிப்பிட்டார்.

தில்லியில் தற்போது இருக்கும் நாடாளுமன்ற வளாகம் சுமார் 96 ஆண்டுகள் பழமையானது. இந்த கட்டடத்தை இடிக்காமல் பழைய கட்டடத்தையொட்டி 64,000 சதுர மீட்டர் பரப்பளவில் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில ரூ.20,000 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற வளாகத்தை வருகிற 28 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்க உள்ளார். இந்த நிலையில் விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து காங்கிரஸ் கட்சி உள்பட 19 எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்ற வளாக திறப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. தேசத்தின் தலைவராக குடியரசுத் தலைவராக இருக்கும் நிலையில் வரலாற்று சிறப்பு மிக்க புதிய நாடாளுமன்ற வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இதுதொடர்பாக ஜம்முவில் குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதிய நாடாளுமன்ற வளாக திறப்பு விழா நிகழ்ச்சியை காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. இதில் கலந்து கொள்வதா வேண்டாமா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

ஆனால், ஒரு விஷயத்தை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். புதிய நாடாளுமன்றம் கட்ட வேண்டும் என்பது 1991-92 இல் பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது தெரிவித்த யோசனைதான். அப்போது சிவராஜ் பாட்டீல் மக்களவைத் தலைவராகவும், நான் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராகவும் இருந்தோம். அப்போது இப்போதுள்ள நாடாளுமன்றத்தைவிட மிகப்பெரிய அளவில் புதிய நாடாளுமன்றம் அமைக்க வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது. எனினும் பல்வேறு காரணங்களால் அந்த யோசனை கிடப்பில் போடப்பட்டு விட்டது.

இப்போது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல விஷயம்தான்” என்றார் குலாம்நபி ஆஸாத்.

எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்கள் இடம்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதுதான் புதிய நாடாளுமன்ற வளாகம். 2026 ஆம் ஆண்டுவரை எம்.பி.க்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது. மக்கள் தொகை 1952 இல் இருந்ததைவிட ஐந்து மடங்கு தற்போதுஅதிகரித்துவிட்ட நிலையில் அதற்கு ஏற்றாற்போல் மக்களவைத் தொகுதி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கபட வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com