காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சி

ஜனதா தளம் கட்சியோடு ஒட்டுமில்லை, உறவுமில்லை - காங்கிரஸ் காட்டம்!

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவர இருக்கும் நிலையில் எந்தக் கட்சி ஆட்சியமைக்கும் என்பதை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. கடைசிக் கட்ட பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் கட்சிக்கு விழ வேண்டிய வாக்குகளை ஜனதா தளம் கவர்ந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் கோபத்தில் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

அதிக பெரும்பான்மை பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என்று இந்தியா டுடேவின் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுக்கே நம்பிக்கை இல்லாத நிலைதான் நீடிக்கிறது. தொங்கு சட்டமன்றம் அமையும் என்று வரும் செய்திகளால் பா.ஜ.கவும், ஜனதா தளமும் மகிழ்ச்சியோடிருப்பதும், காங்கிரஸ் கட்சி உற்சாகத்தை தொலைத்து நிற்பதும் புதிதல்ல. ஐந்தாண்டுகளுக்கு முன்னரும் இதுதான் நடந்தது.

சென்ற முறை 37 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருந்த ஜனதா தளம், கிங் மேக்கராக செயல்பட்டது. ஆனால், இம்முறை ஜனதா தளத்தோடு ஒட்டுமில்லை, உறவுமில்லை என்பதில் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில தலைவரான டி.கே. சிவகுமார் உறுதியாக இருக்கிறார். நிச்சயம் பெரும்பான்மை கிடைத்துவிடும். எப்படியும் 140 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.

கடைசி நேரத்தில் ஜனதா தளத்திலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்கள் செய்த உள்ளடி வேலைகளும், குழப்பங்களும் காங்கிரஸ் தலைவர்களை கோபப்படுத்தியிருக்கின்றன. ஜனதா தளத்திலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்து தேர்தலில் போட்டியிட இடமும் பெற்றுக்கொண்டு ஆனால், பிரச்சாரத்தில் தீவிரம் காட்டாதவர்களை சித்தாராமையா விட்டுவைக்கவில்லை. குறிப்பாக சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்ட மாவள்ள சித்தேகவுடாவை வெளிப்படையாகவே விமர்சனம் செய்திருக்கிறார்.

ஜனதா தளத்தில் இருந்த மாவள்ளி சித்தேகவுடா, சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட இடம் கேட்டபோது குமாரசாமி மறுத்துவிட்டார். இதனால் அதிருப்தியடைந்தவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தபோது, காங்கிரஸ் சார்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. காங்கிரஸ் வேட்பாளராக பிரச்சாரத்தை ஆரம்பித்த சித்தேகவுடா, தேர்தலுக்கு நான்கு நாட்கள் முன்னதாக காணாமல் போய்விட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் கோபமடைந்த சித்தாராமையா, மாவள்ளி சித்தேகவுடா ஜனதா தளம் கட்சி சார்பாக போட்டியிட்ட ஜி.டி.தேவேகவுடாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், பல கோடி ரூபாய் பணம் பெற்றுக்கொண்டதாகவும் வெளிப்படையாக குற்றம் சாட்டினார். இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பதறிப்போன சித்தேகவுடா, தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்பு குடும்ப பிரச்னையில் சிக்கிக் கொண்டேன். அதனால், பிரச்சாரத்திற்கு செல்லமுடியவில்லை. எனக்கு சீட் கொடுத்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எதையும் செய்ய மாட்டேன். சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோருக்கு நான் எப்போதும் துரோகம் செய்ய மாட்டேன் என்று உப்பு மீது சத்தியம் செய்திருக்கிறார்.

எது எப்படியோ, சாமுண்டீஸ்வரி தொகுதி காங்கிரஸிடமிருந்து கைநழுவிபோய்விட்டதாகவே தெரிகிறது. தொகுதியில் ஜெயிக்கப்போவது பா.ஜ.கவா, ஜனதா தளமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com