பிரதமர் பதவி மீது ஆசை இல்லை: மீண்டும் தெளிவுபடுத்திய முதல்வர்!

பிரதமர் பதவி மீது ஆசை இல்லை: மீண்டும் தெளிவுபடுத்திய முதல்வர்!

பிகாரில், கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து முதல்வரானார் நிதிஷ்குமார். பின்னர் பா.ஜ.க. கொடுத்த நெருக்கடியாலும், பா.ஜ.க.வின் திரைமறைவு வேலைகளைக் கண்டு கூட்டணியை முறித்துக் கொண்டு லாலுவின் ராஷ்ட்ரீய ஜனத்தாளத்துடன் சேர்ந்து புதிய கூட்டணி அமைத்து முதல்வராகத் தொடர்கிறார்.

புதிய கூட்டணியிலுமே லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சிமீது ஏதாவது ஒரு கருத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். அதேபோல லாலு காட்சி பிரமுகர்களும் நிதிஷ்குமார் மீது ஏதாவது ஒரு புகாரை தெரிவித்து புகைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நிதிஷ்குமாருக்கு ஒருகாலத்தில் நெருக்கமாக இருந்தவருமான உபேந்திர குஷ்வாஹா, பிகார் துணை முதல்வராக நியமிக்கப்படலாம் என்ற வதந்தி நிலவி வந்தது. தற்போது துணை முதல்வராக உள்ள லாலுவின் மகன் தேஜஸ்வியின் அதிகாரத்தையும் செயல்பாடுகளையும் குறைக்கும் நோக்கில் இந்த முடிவை நிதிஷ் எடுத்துள்ளதாகவும் பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தேஜஸ்வி யாதவ் தவிர மேலும் ஒரு துணை முதல்வரை நியமிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று முதல்வர் நிதிஷ்குமார் திட்டவட்டமாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராகும் ஆசை தமக்கு இல்லை என்றும் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் கையில் அந்த பொறுப்பை கொடுக்க விரும்புவதாகவும் கூறினார்.

மேலும் 2024 ஆம் ஆண்டு மக்களவைக்கு தேர்தல் வருவதால் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்கும் பணியில் தமது கவனத்தை செலுத்தப்போவதாகவும் கூறியிருந்தார். குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பெகுசராய் என்ற இடத்தில் பேசிய முதல்வர் நிதிஷ்குமார், தமக்கு பிரதமர் பதவி மீது ஆசை ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் மகா கூட்டணியில் உள்ள எவரும் “நிதிஷ் பிரதமர்” கோஷத்தை எழுப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக பிகார் துணை முதல்வர் தேஜஸ்வினி யாதவ், நிதிஷ்குமாருக்கு பிரதமராகும் விருப்பம் இருப்பதாக கூறப்படும் செய்திகளை மறுத்துள்ளார். மூத்த தலைவரான நிதிஷ்குமார், வரும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியிலேயே கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

பிகார் முதல்வர் நிதிஷ்குமார்தான். நாங்கள் அவரின் வழிகாட்டுதலில் செயல்பட்டு வருகிறோம். அவரது ஒரே குறிக்கோள் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதுதான். அவருக்கு பிரதமர் ஆகும் ஆசை துளிக்கூட இல்லை என்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

நிதிஷ்குமார் கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய சமாதான யாத்திரை நடத்தி வருகிறார். தமது 18 ஆண்டு கால ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் கருத்து கேட்டு வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் தொண்டர்கள் “நிதிஷ்குமார் ஜிந்தாபாத், அடுத்த பிரதமர் நிதிஷ்குமார்” ன்று கோஷம் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com