2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை நேரடியாக எதிர்க்க ஆளில்லை என்று ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற கட்சித் தலைவர் உபேந்திர குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வெள்ளிக்கிழமை சந்தித்த குஷ்வாஹா, பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்க்கும் துணிவு யாருக்கும் இல்லை என்று கூறினார்.
பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவருமான நிதிஷ் குமார் சந்தர்ப்பவாத அரசியல் நடத்தி வருகிறார். ஆதாய அரசியல் நடத்துபவர்கள்தான் அவருடன் கூட்டு சேர்ந்துள்ளனர். எதிர்க்கட்சிகளை ஒற்றுமைபடுத்தும் அவரின் முயற்சி ஒருபோதும் பலிக்காது என்றும் குஷ்வாஹா குறிப்பிட்டார்.
ஐக்கிய ஜனதாதளம் கட்சியிலிருந்து விலகி ராஷ்டீரிய லோக் ஜனதாதளம் கட்சியை நிறுவிய உபேந்திர குஷ்வாஹாவிடம், நீங்கள் அமித்ஷாவை
சந்தித்தீர்களே. மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரும் திட்டம் இருக்கிறதா? என்று கேட்டதற்கு, “நான் அமித்ஷா சந்தித்தது உண்மைதான். இது தொடர்பாக பலரும் பலவிதமாக பேசலாம். ஆனால், நேரம் வரும்போது நான் முறைப்படி எல்லாவற்றையும் தெரிவிப்பேன்” என்றார் குஷ்வாஹா.
உபேந்திர குஷ்வாஹா, ராஷ்டீரிய லோக் சமதா கட்சியை நடத்தி வந்தபோது தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்து மத்தியில் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம்பெற்றார். 2019 மக்களவைத் தேர்தல் சமயத்தில் அவர் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகி காங்கிரஸ், ராஷ்டீரீய ஜனதாதளம் உள்ளிட்ட மகா கூட்டணியில் இடம்பெற்றார்.
எனினும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற நேரத்தில் அவர் மாயாவதியின் பி.எஸ்.பி. மற்றும் அஸ்ஸாவுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டார். கூட்டணி வென்றால் முதல்வராகும் கனவு அவருக்கு இருந்தது. ஆனால், தேர்தலில் பெரும் தோல்வி அடைந்ததை அடுத்து அவர் மீண்டும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளத்துக்கு திரும்பி தனது கட்சியை இணைத்துக் கொண்டார்.
ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பும், கட்சி மேலவை உறுப்பினர் பதவியும் தரப்பட்டது. எனினும் லாலு கட்சியின் தேஜஸ்வி யாதவுக்கு துணை முதல்வர் பதவி கிடைத்த
நிலையில் தமக்கும் துணை முதல்வர் பதவி கிடைக்கும் என நினைத்தார். ஆனால், அவரது கனவு பலிக்கவில்லை.
தனக்கு துணை முதல்வர் பதவி கிடைக்காததால் ஐக்கிய ஜனதாதளத்திலிருந்து அவர் விலகி மீண்டும் ராஷ்டீரிய லோக் ஜனதாதளம் கட்சியை நிறுவியுள்ளார். பிகாரில் கோரி சமூகத்தினரிடையே அதிக செல்வாக்கு பெற்றவர் குஷ்வாஹா. இந்த நிலையில் அவரை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் இழுத்தால் 2024 மக்களவைத் தேர்தலில் கணிசமான இடங்களை பெறமுடியும் என அமித்ஷா கருதுகிறார். இதன் தொடர்ச்சியே குஷ்வாஜா, அமித்ஷா சந்திப்பாகும்.
இந்த நிலையில்தான் அமித்ஷாவை சந்தித் குஷ்வாஹா, 2024 மக்களவைத் தேர்தலில் மோடியை எதிர்க்க ஆளில்லை என்று கூறியுள்ளார்.
உபேந்திரே குஷ்வா அமித்ஷாவை சந்திப்பதற்கு முன்னதாக பிகாரின் ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சாவின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜிதன்ராம் மஞ்சியும் ஷாவை சந்தித்துப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.