மேகாலயத்தில் அரசியல் விளையாட்டு எதிரணியினர் ஆட்சி அமைக்க முயற்சி!

மேகாலயத்தில் அரசியல் விளையாட்டு எதிரணியினர் ஆட்சி அமைக்க முயற்சி!

மேகாலயா மாநிலத்தில், மொத்தம் உள்ள 60 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு கடந்த பிப். 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

மார்ச் 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆனாலும் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

தேசிய மக்கள் கட்சி 26 இடங்களை வென்று அதிக இடங்களை வென்ற தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது. ஐக்கிய ஜனநாயக கட்சி 11 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும் வென்றுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் 5 டங்களை கைப்பற்றியுள்ளது. எனினும் இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 2 இடங்களே கிடைத்துள்ளன. எனினும் தேசிய மக்கள் கட்சி ஆட்சியமைக்க பா.ஜ.க. ஆதரவு தெரிவித்துள்ளது. ஒத்த கருத்துடைய கட்சிகளின் ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சி மீண்டும் கான்ராடு சங்மா தலைமையில் ஆட்சி அமைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையே ஆளும் தேசிய மக்கள் கட்சி மற்றும் பா.ஜ.க. தவிர இதர அரசியல் கட்சிகள் ஒன்றுகூடி மாநிலத்தில் ஆட்சியமைப்பது குறித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

முதல்வரும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான கான்ராடு சங்மா, மாநில ஆளுநர் பாகு செளஹானை சந்தித்து தங்கள் கூட்டணிக்கு ஆட்சியமைக்க பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தங்கள் கூட்டணிக்கு 32 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாகவும், ஹெச்.எஸ்.பி.டி.பி. மற்றும் இரண்டு சுயேச்சைகள் தங்களை ஆதரிப்பதாகவும் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்துள்ளார். ஆனால், ஹெச்.எஸ்.பி.டி.பி. கட்சியினர் சங்மாவுக்கு ஆதரவு இல்லை தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஐக்கிய ஜனநாயக கட்சித் தலைவர் மெட்பாஹ் லிங்டோ, தங்களுக்கு 31 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆட்சியமைக்க போதுமான பலம் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஐக்கிய ஜனநாயக கட்சி, திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ், பி.டி.எப். மற்றும் ஹெச்.எஸ்.பி.டி.பி. கட்சியினர் ஆதரவும், சுயேச்சை உறுப்பினர் ஒருவர் தங்களை ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான முகுல் சங்மா, இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை எப்படி பெறுவது என்பது எங்களுக்குத் தெரியும். விரைவில் எங்கள் கூட்டணியின் பெயர் அறிவிக்கப்படும் என்றார்.

தேசிய மக்கள் கட்சி மற்றும் பா.ஜ.க. தவிர மற்ற அரசியல்கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள். ஒரு சில விஷயங்களை விவாதித்து முடித்தபின் நாங்கள் ஆட்சி உரிமை கோருவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எதிரணியினர் அனைவரும் ஒன்றாக திரண்டுள்ளோம். மாநிலத்தில் மீண்டும் மோசமான ஆட்சி நடக்காமல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். மக்கள் நலனுக்காக நாங்களை அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளோம் என்றார்.

முன்னதாக ஹெச்.எஸ்.பி.டி.பி. எம்.எல்.ஏ.க்கள் இருவர் தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால், கட்சித் தலைவமை அவர்களுக்கு எந்த அதிகாரமும் அளிக்கவில்லை. தேசிய மக்கள் கட்சிக்கான தரவு வாபஸ் பெறப்படுகிறது என்று கட்சியின் தலைமை தெரிவித்தது.

இந்நிலையில் கான்ராட் சங்மா வின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஆளுநர் செளஹான், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை அவரையே முதல்வராகத் தொடருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com