பா.ஜ.கவுக்கு எதிராக பேசுவதால் என்னை ஒழிக்க திட்டம் - மல்லிகார்ஜூன கார்கே!
பா.ஜ.கவுக்கு எதிராக பேசுவதால் என்னையும் என்னுடைய குடும்பத்தையும் ஒழிக்க திட்டமிடுகிறார்கள். என்னுடைய உயிரைப் பற்றி கவலையில்லை. என்னை அழித்தால் என்னுடைய இடத்திற்கு வேறொரு வருவார் என்று உருக்கமாக பேசி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடைசி நாளில் பிரச்சாரம் செய்திருக்கிறார்.
சமீபத்தில் கார்கே குடும்பத்தை கொல்ல முயற்சி நடப்பதாக இணையத்தில் ஒரு வாட்ஸ் அப் ஆடியோ வைரலானது. கார்கேவுக்கு எதிராக பா.ஜ.கவினர் சதி செய்வதாக கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம் சாட்டியிருந்தார்.
கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்துவிடுவதாக சித்தாப்புரா தொகுதி பா.ஜ.க வேட்பாளர் மணிகண்ட ரத்தோடு பேசி உள்ளார் என்றும் இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கார்கே குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அகில இந்திய காங்கிரஸ் தலைவராக உள்ள கார்கேவுக்கு எதிராக ஏன் பா.ஜ.க வேட்பாளர் பேசவேண்டும் என்று கேள்வி எழுந்தது. இது குறித்து விசாரிக்க முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டிருக்கிறார். காவல்துறையினரும் விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள்,
இந்நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு தன்னுடைய சொந்த ஊரான கலபுரகிக்கு வந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தனக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் விடுப்பட்டுள்ள மிரட்டல் குறித்து உருக்கமாக பேசினார்.
என்னுடைய குடும்பத்தை அழிக்க வேண்டும் என்கிற தைரியம் பா.ஜ.க தலைவர்களுக்கு மட்டுமே வரும். என்னை பாதுகாக்க அம்பேத்கரின் அரசியல் சாசனம் உள்ளது. எனக்கு ஆதரவாக கலபுரகி மக்கள் இருக்கிறார்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு எனக்கு ஆதரவாக இந்திய மக்களும் இருக்கிறார்கள்.
என்னையும், எனது குடும்பத்தினரையும் அழித்தால் எனது இடத்திற்கு வேறு நபர் வருவார். என்னைப் பற்றி பேசுவது சரி. ஏன் என்னுடைய மகனை பற்றி பேசவேண்டும்? கடந்த 52 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். எனது குடும்பத்தினரை எதற்காக இழுக்கிறீர்கள்? நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன். மக்களின் ஆசியுடன் தொடர்ந்து இருப்பேன்.
பா.ஜ.கவினர் என்ன நினைக்கிறார்களோ அதை செய்யட்டும். என்னுடைய உயிர் பறிக்கப்பட்டால் எனக்கு கவலையில்லை. எனக்கு 81 வயதாகிறது. இன்னும் பத்தாண்டுகள் உயிருடன் இருப்பேன். அதற்கு முன்பு என்னை கொல்லவேண்டுமென்றால் தாராளமாக செய்யட்டும். இறுதி மூச்சுவரை ஏழை மக்களுக்காக பாடுபடுவேன் என்று பேசியிருக்கிறார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நாள் முதல் பா.ஜ.கவின் தேசியத் தலைவர் ஜெ.பி நட்டார், ஒவ்வொரு மாதமும் பிரச்சாரத்திற்கு வந்து சென்றிருக்கிறார். ஆனால், அகில இந்திய காங்கிரஸ் தலைவரான கார்கே தொகுதி பக்கமே தலைகாட்டவில்லை. எனினும், கடைசி நாளில் உருக்கமாக பேசி அனுதாபத்தை தேடிக்கொண்டுவிட்டார் என்கிறது, குமாரசாமி கட்சி வட்டாரம்.