கர்நாடக வெற்றியால் தப்புக்கணக்கு போடவேண்டாம் காங்கிரஸை எச்சரித்த பிரசாந்த் கிஷோர்!
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைத்த மாபெரும் வெற்றியை கருத்தில் கொண்டு 2024 மக்களவைத் தேர்தலிலும் வெற்றியை எட்டிப் பிடித்துவிடலாம் என்று காங்கிரஸ் கட்சி அசட்டையாக இருக்க வேண்டாம் என தேர்தல் உத்திகளை வகுப்பதில் நிபுணரான பிரசாந்த் கிஷோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய அரசியல் செயல் குழு (ஐ-பிஏசி) என்னும் அமைப்பை ஏற்படுத்தி, தமது சொந்த மாநிலமான பிகாரில் “ஜன சுராஜ்” பிரசாரத்தை தொடங்கியிருக்கும் பிரசாந்த் கிஷோர், கர்நாடகத்தில் காங்கிரஸ் பெற்ற வெற்றியை தவறான கோணத்தில் கருதி செயல்படக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாட மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ், அடுத்து 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. 2018 ஆம் ஆண்டு மூன்று மாநிலங்களில் வெற்றிபெற்ற போதிலும் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் தோல்வியைத் தழுவியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனாலும், இந்த வெற்றியை வைத்து அடுத்து வரும் மக்களவைத் தேர்தலிலும் வெற்றிவாகை சூடிவிடலாம் என காங்கிரஸ் தப்புக்கணக்கு போடக்கூடாது என்று கிஷோர் எச்சரித்தார்.
பிகார் மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள அவர், காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக ஓய்வெடுத்து
வருகிறார். எனினும் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரிவிக்கப்படவில்லை.
2012 ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜவாதி கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 தொகுதிகளை கைப்பற்றியதையும் கிஷோர் சுட்டிக்காட்டினார்.
2013 கர்நாடக தேர்தலில் அமோக வெற்றிபெற்ற காங்கிரஸ், மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.விடம் பரிதாபமாக தோல்வி அடைந்ததையும் நினைவுகூர்ந்தார்.
2018 சட்டப்பேரவைத் தேர்தல்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் வெற்றிபெற்றதையும், பின்னர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்த மூன்று மாநிலங்களிலும் படுதோல்வி அடைந்ததையும் காங்கிரஸ் மறந்துவிடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
45 வயதான பிரசாந்த் கிஷோர் சிறந்த அரசியல் ஆய்வாளர். நரேந்திர மோடி, நிதிஷ்குமார், அரவிந்த் கெஜ்ரிவால், எம்.கே.ஸ்டாலின் மற்றும் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு அவர் தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுத்து வெற்றிக்கு வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2012 ஆம் ஆண்டு இவரது தேர்தல் உத்திகள் மூலம்தான் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது.