ராகுல் காந்தி தேசபக்தர் அல்ல, நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்: பிரக்யா தாகுர்!

ராகுல் காந்தி தேசபக்தர் அல்ல, நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்: பிரக்யா தாகுர்!

லண்டனில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வெளிநாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு பிறந்தவர் ஒருபோதும் தேசபக்தராக இருக்க முடியாது என்று அன்றே சாணக்கியர் கூறினார். ராகுல் காந்தி விவகாரத்தில் அவரது வார்த்தை உண்மையாகிவிட்டது. வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை தரக்குறைவாக விமர்சித்ததற்காக ராகுல் காந்தியை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. பிரக்யா தாகுர் கூறினார்.

சமீபத்தில் லண்டனில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசிய ராகுல் காந்தி, இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்கள் நெரிக்கப்படுகின்றன. எதிர்க்கட்சியினர் பேச முற்பட்டால் மைக்குகள் அணைக்கப்படுகின்றன என்று கூறியிருந்தார்.

மேலும் இந்தியாவில் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது என்றும் ராகுல் கூறியிருந்தார்.

ராகுல் இவ்வாறு பேசியதிலிருந்தே அவர், இந்தியாவைச் சேர்ந்தவர் அல்ல என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஏனெனில் அவரது தாய் (சோனியா காந்தி) இத்தாலியைச் சேர்ந்தவர் என்று சாத்வி பிரக்யா என்று அழைக்கப்படும் பிரக்யா தாகுர் கூறினார்.

நாடாளுமன்றம் சுமுகமாக செயல்பட்டால் அதிக பணிகளை செய்ய முடியும். அதிக நேரம் பணி செய்வது காங்கிரசுக்கு பிடிக்காது. காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே அழிவின் விளிம்பில் இருக்கிறது. இப்போது அவர்களின் மனதும் தூய்மை கெட்டுள்ளது என்றார் அவர்.

நீங்கள் (ராகுல்காந்தி) இந்த நாட்டில் ஒரு கட்சியின் தலைவர். மக்கள் பணியாற்றவே நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். இப்போது நீங்களே உங்கள் நாட்டு மக்களை அந்நிய மண்ணில் இருந்து கொண்டு இழிவுபடுத்துகிறீர்கள். வெளிநாட்டில் இருந்து கொண்டு நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை என்கிறீர்கள். இதைவிட வெட்கக்கேடான செயல் ஏதும் இல்லை. உங்களுக்கு அரசியல் தெரியவில்லை. உங்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதுதான் ஒரே வழி என்றார் பிரக்யா தாகுர்.

முன்னதாக பிரிட்டிஷ் நாடாளுமன்ற எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக நான் இருக்கிறேன். நாடாளுமன்றத்தில் மைக்குகள் வேலை செய்கின்றன. ஆனால், துரதிருஷ்டமான விஷயம் என்னவெனில் எதிர்க்கட்சி தலைவர்கள் பேசும்போது மைக்குகள் அணைக்கப்பட்டு விடுகின்றன. இந்தியாவில் ஜனநாயகத்தின் குரல்வளைகள் நெரிக்கப்படுகின்றன என்று கூறியிருந்தார்.

பண மதிப்பீட்டு நடவடிக்கை, ஜிஎஸ்டி விவகாரம், இந்திய எல்லைக்குள் சீன துருப்புகள் எல்லை மீறி உள்ள நுழைந்தது என பல விஷயங்கள் பேசுவதற்கு இருந்தும் எங்களை பேச அனுமதிக்கவில்லை. நாடாளுமன்றம் என்று ஒன்று இருந்தால் அங்கு காரசார விவாதங்கள் இருக்கத்தானே செய்யும். எங்களை பேசவிடாமல் தடுக்கிறார்கள். எங்கள் குரல்வளை நெரிக்கப்படுகிறது என்று ராகுல் கூறியிருந்தார்.

பா.ஜ.க.வை யாரும் வெற்றிகொள்ள முடியாது. இந்தியா ஒளிர்கிறது என்று 2004 ஆம் ஆண்டு சொன்னார்கள். ஆனால், அப்போது வெளிவந்த தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சி அளித்தது. நான் மக்களிடம் பேசவும், அவர்கள் சொல்வதை கேட்கவுமே இருக்கிறேன். எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டுவருவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று ராகுல் குறிப்பிட்டிருந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com