பா.ஜ,கவுக்கு ஆதரவளித்த ரஜினி பட நாயகி; நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுவாரா?
கர்நாடகாவின் மாண்டியா தொகுதியின் சுயேச்சை எம்.பியும், நடிகையுமான சுமலதா அம்பரீஷ் தன்னுடைய ஆதரவை பாஜகவுக்கு அளித்திருக்கிறார். மறைந்த கன்னட நடிகரும், காங்கிரஸ் எம்.பியுமான அம்பரீஷின் மனைவியுமான சுமலதா, தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.
முரட்டுக்காளையில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கதாநாயகியாக நடித்த சுமலதா, பின்னாளில் ரஜினியின் நெருங்கிய நண்பரான நடிகர் அம்பரீஷை திருமணம் செய்து கொண்டார். ப்ரியா, தாய் மீது சத்தியம் உள்ளிட்ட படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்த அம்பரீஷ், பின்னாளில் சுமலதாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
கன்னட சினிமாவில் ரிபெல் ஸ்டார் என்னும் பெயரை பெற்று, அம்பரீஷ் புகழ் பெற்ற முன்னணி நடிகராக இருந்தவர். ஏறக்குறைய 200 கன்னட படங்களில் நடித்தவர். பிஸியாக இருந்த அம்பரீஷை, தேவ கௌடா அரசியலுக்கு அழைத்து வந்தார். 90களில் ஜனதா தளத்தில் சேர்ந்து, மாண்டியா தொகுதியிலிருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னாளில் ஜனதா தளத்திலிருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பின்னரும் மாண்டியா தொகுதியிலிருந்து தொடர்ந்து மூன்று முறை எம்.பியாக வெற்றி பெற்றிருக்கிறார். கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாண்டியா தொகுதியில் நிரந்தர எம்.பியாக அம்பரீஷ் இறுதி வரை இருந்திருக்கிறார்.
2018ல் உடல்நலக்குறைவால் அம்பரீஷ் மறைந்தபின்னர், சுமலதா நேரடி அரசியலுக் வந்தார். 2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் இடம் வழங்கப்படாவிட்டாலும் அம்பரீஷ் வெற்றி பெற்ற அதே மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு சுமலதா அம்பரீஷ் வெற்றி பெற்றிருக்கிறார்.
மாண்டியா தொகுதியின் தற்போதைய எம்.பியான சுமலதாவின் ஆதரவு யாருக்கு என்பது கன்னட ஊடகங்களில் நீண்டகாலமாகவே விவாதிக்கப்பட்டு வந்தது. மைசூர் - பெங்களூரு இடையே 10 வழிச்சாலையை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மாண்டியாவுக்கு வரவிருக்கும் நிலையில், சுமலதா பிரதமரை சந்திப்பாரா, இல்லையா என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் வருகை, மாண்டியாவுக்கு கிடைத்த பெருமை என்று சுமலதா தெரிவித்ததையெடுத்து அவர் பா.ஜ.கவில் இணையப்போவதாக செய்திகள் வந்தன. இந்நிலையில் தன்னுடைய ஆதரவை மட்டும் உறுதிப்படுத்தியுள்ள சுமலதா, கட்சியில் சேர்வது பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
எனினும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.கவில் சேர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்கிறார்கள் பா.ஜ.கவினர். அது உண்மையென்றால், முதல் முறையாக மாண்டியா தொகுதியிலிருந்து அம்பரீஷ் குடும்பத்தினர் அல்லாதவர்கள் இம்முறை வெற்றிபெறுவார்கள் என்று உற்சாகத்தோடு உலா வருகிறார்கள், சீதாராமையாவின் ஆதரவாளர்கள்.