நாடாளுமன்றத் தொகுதிகள் மறு சீரமைப்பு: மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பின்னர் முடிவு?

நாடாளுமன்றத் தொகுதிகள் மறு சீரமைப்பு: மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பின்னர் முடிவு?

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, எதிர்வரும் காலத்தில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று குறிப்பிட்டது பல்வேறு விவாதங்களை எழுப்பியிருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே நடத்திவிட்டு, கூடிய விரைவில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறு சீரமைக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

நேற்று நடந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, எதிர்காலத்தில் எம்.பி.க்கள் எண்ணிக்கை உயரும் என்றும் புதிய நாடாளுமன்றத்தில், மக்களவை உறுப்பினர்கள் 888 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 384 பேரும் என மொத்தம் 1,272 உறுப்பினர்கள் அமரும் வகையில் இருக்கைகள் வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்ற எம்.பி.க்களின் எண்ணிக்கை வரும் காலங்களில் அதிகரிக்கும் என பிரதமர் மோடி கூறியிருப்பது அரசியல் கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால், தமிழ்நாட்டிலிருந்து டெல்லிக்கு செல்லக்கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையக்கூடும் என்று திமுக, அதிமுக உள்ளிட்டவை கருத்து தெரிவித்துள்ளன.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு சாத்தியமில்லை என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரானா தொற்றுப் பரவலால் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளிப் போயிருக்கிறது. தேர்தலுக்கும் இன்னும் 10 மாதங்களே இருப்பதால் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் ஆளும் பா.ஜ.கவும் ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை.

புதிய மாவட்டங்கள் அல்லது துணை மாவட்டங்களை உருவாக்குவதற்காக நிர்வாக எல்லைகளை முடக்கும் தேதி வருகிற ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, செப்டம்பர் மாதம் வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பமாக வாய்ப்பில்லை. பின்னர் பருவமழை, வெள்ளம், விழாக்காலங்கள் தொடர்வதால் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது அடுத்து வரப்போகும் ஒரு ஆண்டுக்கு வாய்ப்பில்லை என்கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதிய வாக்காளர் பட்டியல் பணிகள் வேறு இருப்பதால் தேர்தல் பணிகளுக்கே முன்னுரிமை தருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இம்முறை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும், குடிமக்களின் தனி நபர் வருமானம் குறித்தும் கணக்கெடுக்க வேண்டியிருக்கிறது. ஜாதி

வாரி கணக்கெடுப்பு நீண்ட நாளைய கோரிக்கையாக இருந்தது. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வேறு அமல்படுத்தப்பட்டிருப்பதால் தனிநபர்களின் பொருளாதார நிலை பற்றியும் தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன.

மக்கள் தொகை கணக்கெடுப்பு இம்முறை பெரும்பாலும் டிஜிட்டல் மயமாக இருக்கும். வழக்கத்தை விட கூடுதலாக பல கேள்விகள் கேட்கப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்து பின்னர், அதைத் பொறுத்த நாடாளுமன்ற தொகுதிகளின் எல்லைகள் சீரமைக்கப்படும்.

சென்ற முறை நடந்த மறு சீரமைப்பில் தமிழ்நாடு ஒரு நாடாளுமன்றத் தொகுதியை இழக்க இருந்தது. பின்னர், போராடி திரும்பப்பெற்றது. இம்முறை கூடுதல் தொகுதிகள் கிடைக்க வாய்ப்பில்லை. இருப்பதை தக்க வைத்துக் கொண்டாலே போதுமானது என்றுதான் அரசியல் கட்சிகள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com