தொகுதிகளை மறுசீரமைப்பு தென்னிந்திய மக்களுக்கு செய்யப்படும் அநீதி - பி.ஆர்.எஸ் கட்சி போர்க்கொடி!

தொகுதிகளை மறுசீரமைப்பு தென்னிந்திய மக்களுக்கு செய்யப்படும் அநீதி -  பி.ஆர்.எஸ் கட்சி போர்க்கொடி!

மக்கள் தொகை அடிப்படையில் தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வது தவறான விஷயம் என்றும் இதை எதிர்த்து தென்னிந்திய அரசியல் கட்சிகள் ஒரே குரலில் எதிர்க்க வேண்டும் என்று தெலுங்கானாவின் பி.ஆர்.எஸ் கட்சியின் செயல் தலைவரும் அமைச்சருமான கே.டி. ராமராவ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேசும்போது, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டார். மூன்று ஆண்டுகளாக தாமதமாகும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து முடிந்தபின்னர், தொகுதி மறுசீரமைப்பு ஆரம்பமாகும் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி முடிக்க முடியாது என்பதால் சர்ச்சை பிசுபிசுத்துப் போனது.

இந்நிலையில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ் கட்சி மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டி.ஆர். எஸ கட்சியின் செயல் தலைவரான கே.டி ராமராவ், அநீதிகளுக்கு எதிராக ஒலிக்கும் தென்னிந்திய மக்களின் குரலை நசுக்க முயற்சி நடப்பதாக குறிப்பிட்டுள்ளார். 2026ல் மத்திய அரசின் எண்ணம் சாத்தியமானால், தென்னிந்தியா முழுவதும் பாதிப்பு இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தொகையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கையை சரிவர பின்பற்றிய தென்னிந்திய மாநிலங்களுக்கு இதுவொரு தண்டனையாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதால் நாட்டின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்தச் செல்லமுடியும் என்று மத்திய அரசுகள் கேட்டுக்கொண்டதன் காரணமாகவே மாநில அரசுகள் அதில் தீவிரம் காட்டி வந்தன.

மாநில அரசுகளின் கடும் உழைப்பு, செயல்பாடுகளின் காரணமாகவே தென்னிந்திய மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, கல்வியறிவு விகிதமும் அதிகரிக்கப்பட்டது. ஆனால், நாட்டின் வளர்ச்சிக்காக தென்னிந்திய மாநிலங்கள் செய்து முடித்த பணிகள் நமக்கெதிராகவே திரும்பியுள்ளன. ஆனால், மத்திய அரசின் வழிமுறையை கேட்டு நடக்காது, மக்கள் தொகையை கட்டப்படுத்த தவறிய வட இந்திய மாநிலங்களுக்கு தொகுதி சீரமைப்பின் மூலமாக சாதகமான நிலை ஏற்பட்டிருக்கிறது.

வெறும் 18 சதவீத மக்கள் தொகையை கொண்டிருந்தாலும், தென்னிந்திய மாநிலங்களில் நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஜி.டி.பியில் 35 சதவீத பங்கு, தென்னிந்திய மாநிலங்களிலிருந்து பெறப்படுகிறது. இந்நிலையில் மக்கள் தொகை அடிப்படையில் தென்னிந்திய மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பது மக்களுக்கு செய்யப்படும் பெரும் அநீதி என்று தெரிவித்திருக்கிறார்.

புதிய வழிமுறையினால் மாநிலங்களுக்கிடையேயான கசப்புணர்வு மேலிடும். இது தேசத்தின் ஒற்றுமையை பாதிக்கும் நிலையை ஏற்படுத்திவிடும். ஆகவே, மத்திய அரசின் திட்டத்தை தென்னிந்திய மாநிலங்கள் ஓரணியில் நின்று எதிரக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

டி.ஆர். எஸ் கட்சி, தேசியக்கட்சியாக பி.ஆர்.எஸ் கட்சியாக உருவெடுத்து சில மாதங்களானாலும் தொடர்ந்து தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வருகிறது. காங்கிரஸ் அல்லாத கட்சிகளை ஒருங்கிணைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது என்பதுதான் திட்டம். இடதுசாரிகள் உள்ளிட்ட மாநிலக் கட்சிகளை அழைத்து ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான கூட்டத்தை நடத்தியது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டவர்ளுடன் சந்திப்பு நடந்தது.

கர்நாடகாவில் காங்கிரஸ் பெரிய வெற்றி பெற்றபோது கூட டி.ஆர். எஸ் கட்சி மௌனமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்வதில் ஏனோ தயக்கம் காட்டி வருகிறது. ஆனால், பா.ஜ.கவை எதிர்ப்பது என்பதில் டி.ஆர்.எஸ் கட்சி முன்னெப்போதையும் விட உறுதியாக இருப்பது தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com