கர்நாடக தேர்தலில் குவியும் நட்சத்திரப் பட்டாளம் - பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்ய ஓ.கே.! காங்கிரஸ் கட்சியென்றால் குழப்பம்!
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் நடிகர்களின் பிரச்சாரம் களைகட்டியிருக்கிறது. பிரச்சாரம் தொடங்கிய நேரத்தில் திடீரென்று யாரும் எதிர்பாராத நிலையில் நடிகர் சுதீப் களமிறிங்கியிருந்தார். பா.ஜ.கவுக்கு ஆதரவான அவரது செயல்பாடு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது. முதல்வர் பசவராஜ் பொம்மையை ஆதரித்து, கர்நாடகா முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்.
சுதீப்பின் பா.ஜக ஆதரவு நிலைப்பாடு, காங்கிரஸ் கட்சி மத்தியில் பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியது. சுதீப்பை யாரோ மிரட்டுவதாகவும், பா.ஜ.கவுக்காக பிரச்சாரம் செய்யாவிட்டால் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை மூலம் மிரட்டுவதற்கு முயற்சி செய்வதாகவும் விமர்சனம் செய்தார்கள். அதை மறுத்த சுதீப், ஆத்மார்த்தமாக பா.ஜ.கவுக்கு ஆதரவளிப்பதாக தெளிவுபடுத்தியிருக்கிறார்.
மண்டியா தொகுதியின் சுயேட்சை எம்.பியான நடிகை சுமலதாவும் பா.ஜ.கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். கர்நாடக சட்டபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி இலவசங்களை அறிவித்து வருகிறது. ஏழை மக்களை ஏழையாக வைத்திருக்கவே காங்கிரஸ் விரும்புகிறது.
பசி என்று வருகிறவர்களுக்கு மீன் பிடித்து கொடுத்தால் ஒரு நாள்மட்டுமே சாப்பிட முடியும். அவர்களுக்கு மீன்பிடிக்க கற்றுக்கொடுத்தால் வாழ்நாள் முழுவதும் சாப்பிடுவார்கள். அதுபோன்ற வளர்ச்சி அரசியல் வேண்டும். ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரம் உயர வழிவகை செய்ய வேண்டும். இலவச திட்டங்களை செயல்படுத்த கூடாது என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
வருணா தொகுதியில் சித்தாராமையாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய நடிகை ரம்யா முன்வந்துள்ளார். முன்னாள் முதல்வர் கிருஷ்ணாவுக்கு உறவினரான ரம்யா, எம்.பியாக இருந்திருக்கிறார். சித்தாராமையாவின் குடும்பத்துடன் நட்பு பாராட்டி வரும் நடிகை ரம்யா, அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்யவிருக்கிறார்.
பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்ய நடிகர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் விஷயத்தில் நிறைய பேர் தயங்குவது தெரிகிறது. அப்படியே காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் செய்தாலும் டி.கே சிவக்குமாருக்குத்தான் ஆதரவு இருக்கிறது. சித்தாராமையாவை ஆதரித்து வெளிப்படையாக பேச தயக்கமுள்ளது.
காங்கிரஸ் கட்சி தலைவர்களை ஜாதி ரீதியாக வீழ்த்த பா.ஜ.கவினர் சதி செய்து வருவதாக பேசப்படுகிறது. சித்தராமையாவை லிங்காயத்துக்கு எதிரானவர் என முத்திரை குத்த நடிகர்களின் பிரச்சாரம் உதவும். நடிகை ரம்யா, நடிகர் துனியா விஜய் உள்ளிட்டோர் சித்தாரமையாவை ஆதரித்து அடுத்த வாரம் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.
ஆனால், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் வருணாவில் பிரச்சாரம் செய்வதற்கான திட்டம் இதுவரை இல்லை. இதுவே காங்கிரஸ் கட்சியில் உள்ள கோஷ்டிப்பூசலை வெளிச்சமிட்டு காட்டுகிறது.