வரும் கல்வி ஆண்டில் அங்கன்வாடி பாடத்திட்டத்தில் கடல் சாகசங்கள் குறித்து கதைகள்: ஸ்மிருதி இரானி!
நாடு முழுவதும் கிட்டத்தட்ட 14 லட்சம் அங்கன்வாடிகள் உள்ளன.
மே 23 அன்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, கோவாவில் உள்ள ஐஎன்எஸ் மண்டோவியில் ஐஎன்எஸ்வி தாரிணியின் கொடியேற்ற விழாவில் பேசினார். அப்போது குழந்தைகளிடையே கடற்பயணங்கள் மற்றும் அதன் சாகசங்கள் குறித்து அறிந்து கொள்ளும் ஆவலைத் தூண்டும் விதமாக அங்கன்வாடி பாடத்திட்டங்களில் இதுவரையில் உலகைச் சுற்றி வந்த சுற்றுலாப்பயணிகள் குறித்த பாடங்களை இடம்பெறச் செய்யவிருப்பதாக அறிவித்தார்.
விரைவில், நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடிகளில், கொந்தளிப்பான கடல்கள், ஆபத்தான வானிலை மற்றும் கடல்சார் வரலாற்றை ஸ்கிரிப்ட் செய்வதற்காக தனிமைப்படுத்தப்பட்ட கடற்பயணங்களைத் தேர்ந்தெடுத்த அபிலாஷ் டோமி உட்பட மேலும் சில இந்திய சுற்றுலாப்பயணிகளின் பயணங்களிலிருந்து பெறப்பட்ட விலைமதிப்பற்ற அனுபவப் பாடங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்.
தேசத்தின் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமான பற்பல கதைகள் நமது கடற்படைகளின் அறியப்படாத பக்கங்களில் நிறையவே உள்ளன என்று அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி அறிவித்ததை அடுத்து இந்தப் புதிய முன்னெடுப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
“நாடு முழுவதும் உள்ள அனைத்து அங்கன்வாடிகளிலும் இந்தியக் கடற்படையைச் சுற்றி வருபவர்களின் கதைகள் கூறப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். இளம் குழந்தைகள் இந்தக் கதைகளால் ஈர்க்கப்படுவார்கள், ஏனெனில், கதைகளில் இடம்பெறுபவர்கள் குழந்தைகளைக் கவரும் விதமாக பல்வேறு விதமான சவால்களை மிகுந்த மன உறுதியுடன் எதிர்கொண்டார்களாக இருப்பதால் அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதென்பது குழந்தைகளுக்கு புதியதொரு உத்வேகத்தைத் தரும்,”
-என்று இரானி கூறினார்.
அதற்கு சிறந்த முன்னுதாரணமாக அமைச்சர் குறிப்பிட்டது, தனியாக உலகைச் சுற்றி வந்த கடற்படை கமாண்டர் அபிலாஷ் டோமியின் (ஓய்வு) பயணங்களை.
கமாண்டர் அபிலாஷ் டோமி,ஓய்வு பெற்ற இந்திய கடற்படை அதிகாரியாவார், இவர்,கடற்படை விமானியாகவும், சிறந்த படகு வீரராகவும் திகழ்ந்தார். இத்தனை தகுதிகள் இருந்ததால் 2013 ஆம் ஆண்டில், கப்பலில் தனியாக இந்த உலகை இடைவிடாமல் சுற்றி வந்த முதல் இந்தியராகவும் ஆனார். அவர் 2018 ல் நிகழ்ந்த கோல்டன் குளோப் பந்தயத்திலும் போட்டியிட்டார்.
அபிலாஷ் டோமி உட்பட, தற்போது, உலகை சுற்றி வந்த மாலுமிகள் பட்டியலில் இந்தியாவில் மட்டும் 8 பேர் உள்ளனர். அவர்கள் முறையே;
1. கேப்டன் திலீப் டோண்டே
2. சிடிஆர் அபிலாஷ் டோமி
3. லெப்டினன்ட் கமாண்டர் வர்த்திகா ஜோஷி
4. லெப்டினன்ட் கமாண்டர் பிரதிபா ஜம்வால்
5. லெப்டினன்ட் கமாண்டர் ஸ்வாதி பி
6. லெப்டினன்ட் ஐஸ்வர்யா போத்தபதி
7. லெப்டினன்ட் எஸ் விஜயா தேவி
8. லெப்டினன்ட் பயல் குப்தா
அங்கன்வாடிகள் நாடு முழுவதும் பரந்த வலையமைப்பைக் கொண்டிருக்கின்றன. ஆகவே இந்தக் கதைகள் மொழி தாண்டி, நாடு தாண்டிவெகுதூரம் பயணிப்பதை அவை உறுதி செய்யும் என நம்பப்படுகிறது.
மே 23 அன்று, ஐஎன்எஸ்வி தாரிணி கோவாவிலிருந்து ரியோ டி ஜெனிரோவிற்கான நீண்ட கடற்பயணத்திற்குப் பிறகு திரும்பியபோது, கப்பலில் இருவர் இருந்தனர் - இருவருமே குழுவின் சிறந்த கடற்படை பெண் அதிகாரிகள். அவர்கள் இருவருமே கேப்டன் திலிப் டோண்டே மற்றும் கமாண்டர் அபிலாஷ் டோமியின் கடற்பயணங்களால் ஈர்க்கப்பட்டு படகோட்டம் மேற்கொண்டவர்கள். அந்தப் பெண் கடற்படை அதிகாரிகளின் பெயர்கள் கோழிக்கோட்டைச் சேர்ந்த லெப்டினன்ட் சிடிஆர் தில்னா கே மற்றும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த லெப்டினன்ட் சிடிஆர் ரூபா அழகிரிசாமி.
“முழு பயணத்தின்போதும், திலீப் டோண்டே மற்றும் அபிலாஷ் டோமியின் வரலாற்றுப் பயணங்களை விவரிக்கும் புத்தகங்கள் என்னிடம் இருந்தன. அவர்களின் மற்றும் உலலைச் சுற்றி வந்த கப்பல் ஐஎன்எஸ்வி தாரிணியின் முந்தைய பயணங்கள் எனக்கு உத்வேகம் அளித்தன. இரண்டு வருடங்களுக்கு முன்புதான் நான் படகில் ஏறினேன். இந்தத் துணிச்சலானவர்கள் எனக்கான வழியை உருவாக்கித் தந்ததால் நான் செய்ததைச் சாதித்தேன்,” என்று லெப்டினன்ட் சிடிஆர் தில்னா ஊடகங்களிடம் கூறினார்.
2017 இல் INSV தாரிணியின் முதல் பயணத்தின் கேப்டனான லெப்டினன்ட் சிடிஆர் வர்த்திகா ஜோஷிக்கு (ஓய்வு), அமைச்சரின் முன்மொழிவு ஒரு அற்புதமான மகிழ்ச்சியை அளித்தது. அவரது சொந்த மாநிலமான உத்தரகண்ட் மாநிலத்தில் கடலைக் கூட பார்க்காத பலர் உள்ளனர், இருப்பினும், லெப்டினன்ட் சி.டி.ஆர் ஜோஷிக்கு சிறுவயதிலிருந்தே ஒரு ஆசை இருந்தது- கடலின் பிரம்மாண்டமான பரந்த தன்மையைக் காண்பது மட்டுமல்லாமல், அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் அவர் விரும்பினார்.
குழந்தைகள் உண்மையில் தங்களுக்கென கொட்டிக் கிடக்கும் பல புதிய வாய்ப்புகள் மற்றும் அவர்கள் வளர்த்துக்கொள்ளக்கூடிய புதுப்புதுக் கனவுகள்
பற்றி அறிந்திருக்க வேண்டும்" என்று மற்றொரு Lt கமாண்டர் ஜோஷி ஊடகங்களிடம் கூறினார்.
கடல் மார்க்கமாக உலகைச் சுற்றி வந்த இந்திய கடற்படை அதிகாரிகளின் பட்டியலில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இப்போது கணிசமாக இடம் பெறத்தொடங்கி இருக்கிறார்கள்.
எனவே, இவர்களைப் பற்றிய உண்மைக் கதைகள், கடற் பயணக்குறிப்புகள் குழந்தைகளிடையே மிகச்சிறந்த ஆர்வத்தை வளர்த்தெடுக்க உதவும். நாமும் தான் எத்தனை காலத்துக்கு மேலை நாட்டு கடற்பயணிகளைப் பற்றியே பாடப்புத்தகங்களிலும், கதைப்புத்தகங்களிலும் வாசித்துக் கொண்டிருப்பது. அமைச்சர் ஸ்மிரிதி இரானியின் கூற்றுப்படி இனி இந்திய மாலுமிகளின் அனுபவத்தை பாடங்கள் வாயிலாகக் கற்றுக் கொள்ள வேண்டியது தான்.