மோடி குறித்த அவதூறு வழக்கில் சூரத் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்த வைக்க மறுப்பு தெரிவித்ததுடன், அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதி எம்.பி.யுமான ராகுல், "எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்?" என்று விமர்சித்தார்.
இது தொடர்பாக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மார்ச் 23-ம் தேதி ராகுல் குற்றவாளி என அறிவித்ததுடன் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. இதையடுத்து, ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி இழந்ததாக மக்களவைச் செயலகம் அறிவித்தது.
ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய சூரத் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், வழக்கு நடைபெறும் வரையில் தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சூரத் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்த வைக்க மறுப்பு தெரிவித்ததுடன், அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி கீதா கோபி விசாரணையில் இருந்து விலகியதால், இந்த மனுவை நீதிபதி ஹேமந்த் பிரச்சக் விசாரித்தார். இன்று விசாரணை நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, ராகுல் காந்திக்கு வழக்கு தொடர்ந்த புர்னேஷ் மோடியின் வழக்கறிஞர் வாதாடும்போது, நாட்டின் பிரதமரை எதிர்க்கட்சி தலைவர் களவாணி என முத்திரை குத்துவது எதுமாதிரியான மொழி? என கேள்வி எழுப்பினார்.
ராகுல் காந்திக்கு இடைக்கால நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை. தனது மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்படும்வரை தண்டனையை நிறுத்தி வைக்கும்படி ராகுல் காந்தி தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் கோடை விடுமுறைக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தது.