திராவிடத் தலைவர்களின் பிறந்த நாளன்று ஸ்வீட் தந்து கொண்டாடும் வழக்கம், பள்ளிகளில் இருந்து வருகிறது. சத்துணவுத் திட்டத்தின் கீழ் மதிய உணவில் சர்க்கரைப் பொங்கல் அளிக்கும் வழக்கத்தை ஜெயலலிதா அரசு ஆரம்பித்தது. தி.மு.க ஆட்சியில் தற்போது விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளன்று சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படுவது போல் இனி வரும் காலங்களில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்த நாளான்றும் வழங்கப்பட இருப்பதாக தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
சென்ற மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தபோது அமைச்சர் கீதா ஜீவன் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படுவது குறித்து முடிவெடுத்திருப்பதாக அறிவித்தார்.
இதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த சத்துணவு மையங்களில் பயன்பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு கருணாநிதியின் பிறந்த நாளான்று சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படுகிறது. இத்துடன் குழந்தைகள் மையங்களில் மேற்கொள்ளப்படும் சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது குழந்தைகளுக்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான காமராஜர். அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெ.ஜெயலலிதா, மு.கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாளான்று சர்க்கரைப் பொங்கல் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
இதற்கான கூடுதல் அரிசி, இனிப்புப் பொங்கல் வழங்க தேவைப்படும் வெல்லம் மற்றும் இதர பொருட்களை அங்கன்வாடிப் பணியாளர்களும் சத்தணவு ஊழியர்களும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படும் நாளின் உணவூட்டுச் செலவினத்திற்குள் (எரிபொருள் நீங்கலாக) வாங்குவதற்கும் அனுமதி அளித்து அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.