"தமிழ்நாடு தன்னுரிமை கழகம்" ஆரம்பித்திருக்கும் பழ.கருப்பையா! கட்சியின் கொள்கை என்ன?

"தமிழ்நாடு தன்னுரிமை கழகம்" ஆரம்பித்திருக்கும் பழ.கருப்பையா! கட்சியின் கொள்கை என்ன?

யூடியூப் சேனல் ஆரம்பிப்பது போல் கட்சி ஆரம்பிப்பது எளிதாகியிருக்கிறது. தி.மு.க. அ.தி.மு.க, காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் என பல கட்சிகளில் இருந்த பழுத்த அனுபவமுள்ள பழ. கருப்பையாவும் புதிய கட்சி ஆரம்பித்திருக்கிறார்.

நேர்மை, எளிமை, செம்மை என்ற கொள்கையின் அடிப்படையில் ஒரு புதிய கட்சியை ஆரம்பித்திருக்கிறோம். ‘தமிழ்நாடு தன்னுரிமை கழகம்’ என்ற பெயரிட்டிருக்கிறோம் என்கிறார்.

கட்சி ஆரம்பிப்பதாக சொன்னதும், சகல தரப்பிலிருந்தும் ஆதரவு வந்துவிட்டதாக மகிழ்ச்சியோடு குறிப்பிடும், பழ. கருப்பையா, தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாப்பது, காந்தீயத்தை முன்வைப்பதுதான் தன்னுடைய லட்சியம் என்கிறார்.

தனிக்கட்சி ஆரம்பித்ததும், மற்ற கட்சிகளின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்தாகவேண்டும். தமிழ்நாடு தன்னுரிமைக் கழகமும் அதை கையிலெடுத்திருக்கிறது. கலைஞர் நினைவாக பேனா நினைவுச்சின்னம் அமைக்கத் தேவையில்லை என்று அதை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது. நாம் தமிழர் குரல் போல் ஒலிக்கிறதே என்றால், இல்லையென்று மறுக்கிறார்கள்.

மெரீனா பீச் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் மீனவர்களுக்குத்தான் தொல்லை. அதை விடுத்து வீராணம்போல புதிதாக பெரிய ஏரியை உருவாக்கி அதற்கு கருணாநிதியின் பெயரை சூட்டலாம். யாருக்கும் கெடுதல் அல்ல. தண்ணீர் பிரச்னையையும் சமாளிக்கவும் உதவும் என்று ஆக்கப்பூர்வமான யோசனைகளை அரசுக்கு தருகிறார்.

இந்து சமய அறநிலையத்துறை என்னும் பெயர் பொருத்தமாக இல்லை. தமிழ் சமயங்கள் அறநிலையத்துறை என்று மாற்றவேண்டும் என்கிறார். ஏற்கனவே அறிவாலயத்தில் இது குறித்து பேசியிருக்கிறேன். கலைஞர் ஆட்சியில் இருந்தால் என்னுடைய கோரிக்கையை ஏற்று உடனே நடைமுறைப்படுத்தியிருப்பார் என்கிறார்.

யூடியூப் மூலமாக பல்வேறு கருத்துக்களை முன்வைக்கிறோம், அதை முறைப்படி கட்சி சார்பாக பதிவு செய்யலாமே என்று நண்பர்கள் தந்த ஐடியா படிதான் சொந்தமாக கட்சி தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கட்சி நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து பல மாதங்கள் பேசிய பின்னரே முடிவெடுத்திருப்பதாக பழ. கருப்பையா சொல்கிறார்.

வெறும் ஆலோசனை மட்டுமல்ல, அரசியலும் உண்டு. தி.மு.க-வையும் அ.தி.மு.க-வையும் எதிர்த்தாலும், மத அரசியல் நடத்தும் பா.ஜ.க-வை மிகக் கடுமையாக எதிர்க்கிறோம் என்கிறார்.

எது எப்படியோ, மக்கள் நீதி மய்யத்தில் இருந்த அனுபவம் பழ. கருப்பையாவுக்கு கைகொடுத்திருக்கிறது. கமல்ஹாசன் போல் தி.மு.க கூட்டணியில் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா? அறிவாலயம்தான் முடிவு செய்ய வேண்டும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com