தார்மீகம் பற்றி பேச தாக்கரேவுக்கு உரிமை இல்லை - பட்னாவிஸ்!

தார்மீகம் பற்றி பேச தாக்கரேவுக்கு உரிமை இல்லை - பட்னாவிஸ்!

மகாராஷ்டிர விவகாரத்தில் உத்தவ் தாக்கரே மீண்டும் அரசு அமைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது சரியான நடவடிக்கையாகும் என்று மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர விகாஸ் அகாதி கூட்டணி உத்தவ் தலைமையில் மீண்டும் ஆட்சியமைக்க முடியாது என்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு சரியானது. இதை நான் வரவேற்கிறேன். இது ஜனநாயகத்துக்கு, ஜனநாயக நடைமுறைகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியாரி கோரிய செயல் கண்டனத்துக்குரியது. ஷிண்டே பிரிவைச் சேர்ந்த பரத் கோகவாலேயை சிவசேனை கட்சிக் கொறடாவாக பேரவைத் தலைவர் நியமித்த செயல் சட்டவிரோதமானது என ஐந்து பேர் அடங்கிய அமர்வு கூறியிருந்தாலும் சிவசேனை-பா.ஜ.க. அரசு ஆட்சியமைத்தது சட்டப்படி சரியானதுதான் என்று நீதிபதிகள் கூறியுள்ளதாக பட்னவிஸ் கூறினார்.

மகாராஷ்டிர விகாஸ் அகாதி கூட்டணியின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இனி மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை- பா.ஜ.க.

கூட்டணி அரசு குறித்து யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அது சட்டப்பூர்வமான அரசாகும் என்றும் பட்னவிஸ் குறிப்பிட்டார்.

முன்னதாக, கடந்த ஆண்டு தாம் செய்தது போல மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும், துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸும் தார்மிக அடிப்படையில் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று சிவசேனை உத்தவ் பிரிவின் தலைவர் உத்தவர் தாக்கரே வலியுறுத்தி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள துணை முதல்வர் பட்னவிஸ், தார்மிகம் பற்றி பேசுவதற்கு உத்தவ் தாக்கரேவுக்கு எந்த உரிமையும் இல்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனை பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து வென்றுவிட்டு பின்னர் காங்கிரஸுடன் கைகோர்த்து ஆட்சியமைத்தது. அப்படியிருக்கையில் தார்மிகம் பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன உரிமை உள்ளது. முதல்வர் பதவிக்காக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிவைத்தபோது தார்மிக நெறிகளை அவர் மறந்துவிட்டாரா என்று பட்னவிஸ் கேள்வி எழுப்பினார். மேலும் உத்தவ் தார்மிக அடிப்படையில் தமது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவில்லை. தன்னுடன் இருந்தவர்கள் பிரிந்து போய்விட்டார்களே என்ற பயத்திலும், தோல்வி பயத்திலும் அவர் பதவியை ராஜிநாமாச் செய்தார் என்றார் பட்னவிஸ்.

இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பு உண்மைக்கு கிடைத்த வெற்றியாகும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். இரு தரப்பினரும் தாக்கல் செய்துள்ள தகுதி நீக்க மனுக்கள் குறித்து பேரவைத் தலைவர் முடிவு செய்வார் என்றும் அவர் கூறினார். எனது அரசு சட்டவிரோதமானது என்று உத்தவ் தாக்கரே பிரசாரம் செய்து வந்தார். இப்போது உச்சநீதிமன்றம் உண்மை நிலையை வெளிப்படுத்திவிட்டது. தமக்கு போதுமான ஆதரவாளர்கள் இல்லை என்பதாலேயே உத்தவ் ராஜிநாமாச் செய்தார் என்றும் ஷிண்டே குறிப்பிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com