தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நிபந்தனை விதித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா!

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற  நிபந்தனை விதித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். எனினும் அவற்றை நிறைவேற்ற சில நிபந்தனைகளை விதித்துள்ளார். மேலும் அவை எப்போது நிறைவேற்றப்படும் என்பது குறித்து சில விளக்கங்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அனைத்து வாக்குறுதிகளையும் இந்த நிதியாண்டுக்குள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.

தேர்தல் அறிக்கையில் 200 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஓராண்டுக்கு எவ்வளவு மின்சாரம் தேவைப்படுகிறது என்பது கணக்கிடப்படும். அதிலிருந்து மாதம் எவ்வளவு செலவாகிறது என்ற சராசரி கணக்கிடப்படும். அதன் பிறகு அதில் 10 சதவீதம் கூட்டப்படும். அந்த கணக்கீட்டு முறையில் 200 யூனிட்டுக்கு குறைவாக இருந்தால் மின்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

அடுத்தாக கிருஹ லெட்சுமி திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளோம். இத்திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவியின் வங்கிக்கணக்கு ஆதாருடன் இணைக்கப்படும். இது தொடர்பான பணி ஜூன் 15 இல் தொடங்கி ஜூலை 15 வரை நடைபெறும். அதன் பிறகு தகுதியுள்ள குடும்ப பெண்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த உதவித் தொகை வழங்கப்படும். சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2,000 ஓய்வூதியமாக பெறும் குடும்பத் தலைவிகளுக்கும் இந்த தொகை வழங்கப்படும்.

அன்ன பாக்யா திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும். முந்தைய காங்கிரஸ் அரசு 7 கிலோ வழங்கி வந்தது. அதை பா.ஜ.க. 5 கிலோவாக குறைத்திருந்த். இப்போது 10 கிலோ இலவச அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து செயல்படுத்தப்படும்.

பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் வரும் ஜூன் 11 ஆம் தேதியிலிருந்து செயல்படுத்தப்படும். மாநிலங்களுக்குள் ஓடும் பேருந்துகளில் 50 சதவீதம் ஆண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டப்படிப்பு முடித்து 6 மாதங்களாக வேலையில்லாமல் இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும். திருநங்கைகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதிய பேரணிக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் அரசுகளின் நிலைத்தன்மை குறித்தும், அக்கட்சி அளித்து வரும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் குறைகூறியிருந்தார்.

காங்கிரஸ் கட்சி புதுமையான முறையில் இலவச வாக்குறுதிகளை அளித்து வருகிறது. ஆனால், அவர்களால் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியுமா என்பது தெரியவில்லை. இது போன்ற வாக்குறுதிகளால் நிதிச்சுமை ஏற்பட்டு நாடு திவாலாகும் நிலைதான் உருவாகும் என்றார்.

50 ஆண்டுகளுக்கு முன்பு வறுமைய ஒழிப்போம் என்று காங்கிரஸார் உறுதியளித்தார்கள். ஆனால், அதை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவது அவர்களுக்கு கைவந்த கலை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com