கர்நாடக தேர்தலுக்கு 400 கோடிகளுக்கு மேல் செலவு செய்த தேர்தல் ஆணையம்!

கர்நாடக தேர்தலுக்கு 400 கோடிகளுக்கு மேல் செலவு செய்த தேர்தல் ஆணையம்!

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு இதுவரை 440 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஒவ்வொரு தொகுதிக்கும் 2 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அனைத்து செலவுகளையும் மாநில அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் தேர்தல் செலவு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிகள் தேர்தலுக்கு செலவு செய்யப்படுகின்றன. இதில் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் அரசியல் கட்சிகள் தாராளமாக தேர்தல் நேரத்தில் செலவு செய்வதை பார்க்க முடிகிறது.

கர்நாடகத்தைப் பொறுத்தவரை 224 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. நாளை வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்பட்டு, மதியத்திற்குள் தேர்தல் முடிவுகள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான வெப்பம் நிலவும் காலகட்டத்தில் தேர்தலுக்காக விரிவான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் 2 லட்சம் தேர்தல் ஊழியர்கள் பணியாற்றினார்கள். தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தண்ணீர், உணவு உள்ளிட்டவை ஏற்பாடு செய்து தரப்பட்டன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்துச் செல்வதற்காக பேருந்துகள், வேன்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் செய்திருந்தது.

தேர்தல் ஆணையம் இம்முறை பல சிக்க நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தது. பிரச்சாரங்கள், விளம்பரங்கள் உள்ளிட்டவற்றில் ஏராளமான கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தது. இந்தியாவிலேயே முதல் முறையாக இணைய வழியின் மூலம் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யலாம் என்று அறிவித்திருந்தது. தேர்தல் ஆணையத்தின் பல்வேறு நடவடிக்கைகளை இணையவழி, வாட்ஸ்அப் செய்தி பரிமாற்றங்கள் மூலமாக செய்திருந்தது.

கடந்த தேர்தல்களோடு ஒப்பிடும்போது, சிக்கன நடவடிக்கைகளால் பெரிய மாற்றம் எதுவுமில்லை என்று தெரிகிறது. 2013ல் சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது ஒட்டுமொத்தமாக ரூ.160 கோடி செலவாகியிருந்தது. ஆனால், அடுத்து வந்த ஐந்தாண்டுகளில் செலவு உயர்ந்து விட்டது.

2018ல் நடந்த சட்டமன்றத்தேர்தலில் ரூ.394 கோடி செலவாகியிருந்தது. 160 கோடி திடீரென்று 390 கோடியாக உயர்ந்தமைக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. குறிப்பாக, வாக்காளர்களின் வசதிக்காக கூடுதலாக வாக்குச்சவாடிகள் ஏற்படுத்தப்பட்டதே பிரதான காரணமாக சொல்லப்பட்டது.

தேர்தல் செலவு, ஐந்தாண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதால் 2023 தேர்தலில் குறைந்தபட்சம் 500 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த

நிலையில் 440 கோடி என்பது ஆறுதலான செய்தி என்கிறார்கள் தேர்தல் பார்வையாளர்கள்.

தமிழகத்தை விட கர்நாடகத்தில் பத்து தொகுதிகள் குறைவு. வாக்குச்சாவடிகளில் தமிழகத்தை விட பத்தாயிரம் குறைவு. தமிழகத்திலும் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தவேண்டுமென்றால் தமிழக தேர்தல் ஆணையம் மட்டுமே ஏறக்குறைய 500 கோடி செலவிடவேண்டியிருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com