அமைச்சராக தேர்வுச் செய்யப்பட்ட டி.ஆர்.பி.ராஜா குறித்து உடன்பிறப்புகள் சொல்வது என்ன?
தி.மு.க ஆட்சியில் டெல்டா மாவட்டங்களிலிருந்து அமைச்சர்கள் யாரும் இல்லை என்கிற குறை இருந்து வந்தது. ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே அதிருப்தி எழுந்தது. கலைஞர் ஸ்டைலில் அதை எதிர்கொண்ட முதல்வர் ஸ்டாலினும், நானே டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான் என்று பதிலளித்திருந்தார்.
ஸ்டாலின் ஆட்சியில் மட்டுமல்ல கலைஞர் ஆட்சியில் கூட டெல்டாவிலிருந்து அமைச்சர்கள் வருவது குறைவாகத்தான் இருந்தது. கோ.சி மணி இருந்தவரை நிரந்தர அமைச்சராக கலைஞர் அமைச்சரவையில் இருந்தார். பின்னர் திருவாரூரைச் சேர்ந்த மதிவாணனுக்கு பால்வளத்துறை அமைச்சராகும் வாய்ப்பிருந்தது. ஆனால், ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தபின்னர் டெல்டா முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
தற்போது டி.ஆர்.பி. ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டதையடுத்து, அந்த குறை நீங்கியிருக்கிறது என்கிறது ஆளுங்கட்சி வட்டாரம். ஆனால், மூத்த அரசியல்வாதியும் திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட சிவாஜி கணேசனை வீழ்த்திய துரை. சந்திரசேகரனுக்கு வாய்ப்பு கிடைக்காதது தி.மு.கவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
டெல்டாவின் மற்ற பகுதிகளில் குறிப்பாக நகர்ப்புறங்களில் தி.மு.க வலுவாக இருந்தாலும் அமைச்சராகக்கூடிய அளவுக்கு திறமையான தலைவர்கள் இல்லை. பூண்டி கலைவாணன் முதல் சாக்கோட்டை அன்பழகன் வரை அனைவரும் கட்சிப்பணிகளில் தீவிரமாக ஈடுபடக்கூடியவர்கள். ஆனால், அரசு நிர்வாகத்தில் போதுமான அனுபவமில்லை என்கிறார்கள்.
தற்போதைய சூழலில் அமைச்சராக வருபவர்களுக்கு சம்பந்தப்பட்ட துறை குறித்து குறைந்தபட்ச அறிவு தேவைப்படுகிறது. மாவட்டச் செயலாளர்களாக பல ஆண்டுகள் பணியாற்றியவர்களால் கூட அதிகாரிகளோடு இணைந்து செயல்பட முடியாத நிலை இருக்கிறது. இந்நிலையில் டி.ஆர்.பி ராஜா நல்ல தேர்வுதான் என்கிறார்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள்.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர்' பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகளை ஏற்கனவே தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு செய்து முடித்திருக்கிறார். அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும்.
அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடைபெறவிருக்கிறது. அது தொடர்பாக இம்மாத இறுதியில் முதல்வர் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்யவிருக்கிறார். அவருடன் தொழில்துறை அமைச்சரான டி.ஆர்.பி ராஜாவும் பயணம் செய்யவிருக்கிறார். பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் போல் சரளமாக ஆங்கிலத்தில் பேசக்கூடியவர் என்பது ராஜாவின் பெரிய பிளஸ் பாயிண்ட் என்கிறார்கள்.
முதல்முறையாக அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் டி.ஆர்.பி. ராஜாவுக்கு தொழில்துறை வழங்கப்பட்டிருக்கிறது. முதல்வர் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பதால் முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே திட்டக்குழுவில் இணைந்து பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு என்றாலும் கட்சியில் அனுபவம் மிக்கவர்கள் இருக்கும் நிலையில் தொழில்துறை ராஜாவுக்கு கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சரி, டெல்லியின் முகமாக உள்ள டி.ஆர். பாலுவின் மகனான டி.ஆர்.பி ராஜா, டெல்டாவின் முகமாக இருக்கமுடியுமா? முடியாது என்கிறார்கள், டெல்டாவைச் சேர்ந்த உடன்பிறப்புகள். தொழில்துறை அமைச்சரானாலும் டி.ஆர்.பி ராஜா, மன்னார்குடி பகுதிக்கு மட்டுமே தெரிந்த முகம் என்கிறார்கள்.