“கர்நாடக ஆட்சி பற்றி பேசாமல் உங்களைப் பற்றி பேசியது ஏன்? : பிரதமருக்கு ராகுல் கேள்வி!
கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சி பற்றி பேசாமல் உங்களைப் பற்றி பேசியது ஏன்? என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
கர்நாடக மக்களுக்கு பா.ஜ.க. என்ன செய்தது, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப்போகிறோம் என்பது பற்றி பிரதமர் பேசவேண்டும். அதைவிடுத்து தம்மை காங்கிரஸார் அவமதித்துவிட்டதாகக்கூறி மக்களிடம் அனுதாபம் பெற முயற்சிக்கக்கூடாது என்றார் ராகுல்.
கர்நாடக தேர்தல் பிரசாரத்திற்காக வந்திருக்கும் நீங்கள், கர்நாடகத்தை பற்றி பேசவேண்டும். உங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்க்க்கூடாது. கடந்த மூன்று ஆண்டுகளில் என்ன செய்தீர்கள் என்ன செய்தீர்கள் என்பதைச் சொல்ல வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு என்ன செய்ய திட்டமிட்டுள்ளோம் என்பது பற்றி பேச வேண்டும். கல்வி, சுகாதாரம், இளைஞர்கள் நலன் மற்றும் ஊழலை ஒழிக்க என்ன செய்யப்போகிறோம் என்பதை பற்றி பேச வேண்டும் என்றார் ராகுல் காந்தி.
(கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒரு தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடியை விஷப்பாம்பு
என்று குறிப்பிட்டு பேசியிருந்தார். இதை ஒரு பிரசாரத்தில் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, தம்மை காங்கிரஸார் 91 முறை அவமதித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.)
தும்கூரு மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர், “இந்த தேர்தல் பிரதமருக்கானது அல்ல. கர்நாடக மக்களுக்கான தேர்தல். காங்கிரஸ் உங்களை 91 முறை அவமதித்துள்ளதாக கூறுகிறீர்கள். ஆனால், கர்நாடகத்தில் மூன்றாண்டு ஆட்சியிலிருந்த நீங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று பேசவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்றும் பேசவில்லை. அதைத்தான் நீங்கள் பேச வேண்டும்” என்றார்.
“நான் கர்நாடகத்துக்கு வந்தால் எங்கள் கட்சித் தலைவர்கள் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் செய்யும் பணிகளை பற்றி பேசுவேன். ஆனால், நீங்கள் (பிரதமர் மோடி) உங்கள் முதல்வர் (பசவராஜ் பொம்மை) மற்றும் கட்சி பிரமுகர் எடியூரப்பா பெயரைக்கூட குறிப்பிடாமல் உங்களைப் பற்றியே பேசுகிறீர்கள். அவர்களைப் பற்றி பேசினால் அவர்கள் இருவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.
இந்த தேர்தல் ஒரு தனிநபர் அல்லது பிரதமர் மோடி பற்றியதல்ல, இது கர்நாடக இளைஞர்கள், சகோதரிகள் மற்றும் தாய்மார்கள் தொடர்பானது. இதை பிரதமர் மோடி புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்” என்றார் ராகுல் காந்தி.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் மற்றும் மாநிலத் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
ராகுல் காந்தி மேலும் பேசுகையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும், வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று கூறினார்.
கடந்த மூன்று ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. அரசு செய்யும் பணிகளுக்கு 40 சதவீதம் கமிஷன் பெறும் அரசாக பொம்மை அரசு இருந்தது. மக்களுக்கு நல்லது செய்யாமல் அவர்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசாக இருந்தது என்று குற்றஞ்சாட்டினார்.
கர்நாடக அரசு 40 சதவீதம் கமிஷன் பெற்ற அரசாக இருந்த்து பிரதமர் மோடிக்குத் தெரியாதா? நிச்சயமாக தெரியும். அப்படியிருந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன். இதற்கு மக்களிடம் நீங்கள் (மோடி) பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றார் ராகுல் காந்தி.
இந்த தேர்தலில் 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் வகையில் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் அரசை கவிழ்க்க பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சிக்கக்கூடும். எனவே அதற்கு
வழியில்லாமல் செய்ய வேண்டும் என்றார் ராகுல் காந்தி.