”பிரதமரை தூற்றுபவர்களுக்கு அரசு வீடு எதற்கு?” - மத்திய அமைச்சர் கிண்டல்!

”பிரதமரை தூற்றுபவர்களுக்கு அரசு வீடு எதற்கு?” -  மத்திய அமைச்சர் கிண்டல்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமருக்கு எதிரான அவதூறு வழக்கில் குஜராத் நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் அதிகாரபூர்வமாக வசித்து வந்த 12, துக்ளக் தெருவில் உள்ள அரசு பங்களாவை ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் காலி செய்யுமாறு ராகுலுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த வீட்டில் ராகுல் 2005 ஆம் ஆண்டு முதல் வசித்து வருகிறார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அரசு பங்களா ராகுலுக்குச் சொந்தமானது அல்ல, அது சாதாரண மக்களுக்கானது. பிரதமரை தூற்றுபவருக்கு அரசு வீடு எதற்கு என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கேள்வி எழுப்பினார்.

அரசு விதிகளின்படி தகுதிநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரசு வீட்டில் தங்கியிருக்க முடியாது. அவர்களுக்கு வீட்டை காலி செய்ய ஒருமாதம் அவகாசம் அளிக்கப்படும் என்று கூறிய இரானி, ராகுல் மீது மீண்டும் ஒரு கணையை தொடுத்தார்.

பிரதமர் மோடியின் படம் கிழித்தெறியப்படும் என்று ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு ராகுல்காந்தி உறுதிமொழி அளித்திருந்தார். ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமலே இருக்கும். ஏனெனில் பிரதமர் மோடியின் மிகப்பெரிய பலம் மக்கள்தான் என்று இரானி குறிப்பிட்டார்.

தலித் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை காந்தி குடும்பத்தினர் இழிவுபடுத்துவது இது முதல் முறையல்ல. பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி குடியரசுத் தலைவராக வந்தபோது, அதாவது திரெளபதி முர்முவை காந்தி குடும்பத்தினரின் தூண்டுதல் பேரில் காங்கிரஸார் இழிவுபடுத்தினர் என்றார் ஸ்மிருதி இரானி.

இதனிடையே காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ராகுல் காந்தியை பலவீனப்படுத்த அனைத்து முயற்சியையும் அவர்கள் மேற்கொள்வார்கள். ராகுல் காந்தி. அரசு வீட்டை காலி செய்தால், அவர், தனது தாயாரில் வீட்டில் இருப்பார். அல்லது அவர் என்னிடம் வந்தால், நான் ஒருவீட்டை அவருக்கு கொடுப்பேன்” என்றார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், “வீட்டை காலி செய்வது குறித்து ராகுல் கவலைப்படவில்லை. ஜனநாயகத்தை சீர்குலைக்க ஆளுங்கட்சி முயலுவதுதான் இப்போதுள்ள மிகப்பெரிய பிரச்னை. அதைத்தான் ராகுல் கூறிவருகிறார். அனைத்து எதிர்க்கட்சிகளும் இப்போது ஒன்று சேர்ந்துள்ளன. எந்த ஒரு விஷயமானாலும் நாங்கள் விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கையை செயல்படுத்துவோம்” என்றார்.

அரசு வீட்டை காலி செய்யுமாறு ராகுலுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது எங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. அதானி விவகாரத்தில் பிரதமரிடம் கேள்வி எழுப்பியதால், தனக்கு எதிரானவர்களின் குரல்களை அரசு நெரிக்க முற்படுகிறது என்றார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஹரீஷ் ரவாத்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com