கர்நாடகா காங்கிரஸின் சக்சஸ் பார்முலா  2024ல் எடுபடுமா?

கர்நாடகா காங்கிரஸின் சக்சஸ் பார்முலா 2024ல் எடுபடுமா?

கொண்டாட்டத்தின் உச்சத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு இது கசப்பான விஷயமாக இருக்கக்கூடும். கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க அரசு ஏகப்பட்ட தவறுகளைச் செய்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட கர்நாடக காங்கிரஸ் கட்சியோ, 1989க்கு பின்னர் பிரம்மாண்டமான வெற்றிகளைப் பெற்று விஸ்வரூபமெடுத்திருக்கிறது. இது 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடுபடுமா?

கர்நாடாகாவில் காங்கிரஸ் கையாண்ட அதே அணுகுமுறையை தேசிய அளவில் எடுத்துச் சென்றால் பா.ஜ.கவை தோற்கடித்து, மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப முடியுமா? முடியும் என்றுதான் தேசம் முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் நம்பிக்கையுடன் பேசிவருகின்றன. ஆனால், கர்நாடகா காங்கிரஸ் இதுவரை வாய் திறக்கவில்லை.

2018ல் மத்தியப் பிரதேஷ், ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியை குவித்தது. மாநிலங்களில் ஆட்சியையும் கைப்பற்றியது. ஆனால், ஆறு மாதங்கள் கழித்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற முடியவில்லை. அதே தொகுதிகளில் பா.ஜ.க பெரும் வெற்றிகளை குவித்தது. ராஜஸ்தானில் ஓரிடத்தில் கூட காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை.

கர்நாடக பா.ஜ.க அரசின் செயல்பாடுகள் மோசமானவையாக இருந்தாலும் தோல்விக்கு இன்னும் சில முக்கியமான காரணங்கள் இருந்திருக்க வேண்டும். லிங்காயத்து சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் காங்கிரஸ் பக்கம் சாய்ந்துவிட்டார்கள் என்று வரும் செய்திகள் உண்மையா என்பது தெரியிவில்லை. அதே நேரத்தில் பா.ஜ.கவின் வாக்கு சதவீதம் 36 சதவீதமாக மாறாமல் வலுவாக இருக்கிறது.

கர்நாடகா தேர்தலில் நிஜமான தோல்வியை பெற்ற கட்சியாக ஜனதா தளத்தைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஜனதா தளத்தின் வாக்கு வங்கி சிதைந்து விட்டது. இதுவரை ஜனதா தளத்தில் வாக்களித்தவர்கள் இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள். பா.ஜ.கவால் ஜனதா தளத்திற்கோ, ஜனதா தளத்தினால் பா.ஜ.கவுக்கோ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரியவில்லை. ஜனதா தளத்தின் ஆதரவுத் தளமாக இருந்த ஒக்கலிகர்களின் வாக்குகளை டி.கே சிவக்குமார் கவர்ந்து சென்றுவிட்டார்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை, கர்நாடக தேர்தலில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டியிருக்கிறது. டி.கே சிவக்குமார், சித்தாராமையா என்னும் இரு பெரும் தலைவர்களின் யுக்திகளும், பிரச்சாரமும் பெரிய அளவில் கைகொடுத்துள்ளன. இனி தேசியக் கட்சிகள் மாநில அளவில் உள்ள தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்தாக வேண்டும். டெல்லியில் இருந்தபடி வேட்பாளர்களை அறிவிப்பதை தவிர்த்துவிட்டு, மாநில அளவிலான தலைவர்களை ஊக்கப்படுத்த வேண்டியிருக்கும்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை மாநில தலைவர்களுக்கிடையே உள்ள கோஷ்டி பூசல்தான் பஞ்சாபில் ஆட்சியை இழப்பதற்கு காரணமாக இருந்தது. இன்றும் ராஜஸ்தானில் தேர்தலை எதிர்கொள்ள தயங்குவதற்கு கட்சி தலைவர்களுக்கிடையே நடந்து வரும் பனிப்போர்தான் காரணம். ஒவ்வொரு மாநிலங்களிலும் டி.கே.சிவக்குமார், சித்தாராமையா போன்ற தலைவர்கள் உருவாகினால் மட்டுமே தேசிய அளவில் பா.ஜ.கவை எதிர்கொள்ள முடியும்.

ஹிஜாப், இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை குறைத்தது, மதமாற்ற தடைச்சட்டம், பசுவதை தடைச்சட்டம் ஆகியவற்றை அறிமுகப்படுத்திய பா.ஜ.கவுக்கு நேரடியான இழப்புகள் இல்லை. எதிர்பார்த்தது போல் கடலோர கர்நாடகா, பெங்களூர் மாநகரப் பகுதிகளில் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது. ஆனால், சிறுபான்மையினரை காயப்படுத்தும் பல சர்ச்சைக்குரிய மசோதாக்களால் பா.ஜ.கவுக்கு எதிராக வெறுப்புணர்வு தூண்டப்பட்டு, மறைமுகமான இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்பது உண்மைதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com