கட்சிக்கு நீ, ஆட்சிக்கு நான் - கர்நாடக காங்கிரஸ் முன்வைக்கும் இரட்டை மாடல்!

கட்சிக்கு நீ, ஆட்சிக்கு நான் - கர்நாடக காங்கிரஸ் முன்வைக்கும் இரட்டை மாடல்!

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றாலும், முதல்வர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதில் கடந்த ஒரு வாரமாக சிக்கல் ஏற்பட்டிருந்தது. முதலில் சித்தராமையாவுடன் ஆலோசனை நடத்திய காங்கிரஸ் மேலிடம், பின்னர் டி.கே சிவக்குமாரை டெல்லிக்கு வரவழைத்தது. கார்கே முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து முதல்வராக சித்தராமையா அறிவிக்கப்பட்டிருந்தார்.

ஏற்கனவே பலமுறை பேசப்பட்டிருந்தபடி, முதல் இரண்டரை ஆண்டுகாலம் சித்தராமையா முதல்வராக இருப்பார். டி.கே சிவகுமார் துணை முதல்வராக இருப்பார். இரண்டரை ஆண்டுகள் கழிந்த பின்னர், அமைச்சரவை முற்றிலுமாக மாற்றியமைக்கப்படும். டி.கே சிவக்குமார் முதல்வராகவும், துணை முதல்வராக சித்தாராமையா கைகாட்டுபவர் பதவியேற்பார்கள் என்றும் முடிவு செய்திருக்கிறார்.

இதன் படி கர்நாடகாவில் இரட்டைத் தலைமை மாடல் உருவாகியிருக்கிறது. இரட்டைத் தலைமையோடு அரசியலை முன்னெடுத்தது. தேர்தலையும் எதிர்கொண்டு மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் இரட்டைத் தலைமையாக செயல்பட முடியுமா என்று சந்தேகம் எழுப்புகிறார்கள்.

2017 - 2021 காலகட்டத்தில் தமிழ்நாட்டிலும் இரட்டைத் தலைமை ஆட்சி இருந்த வந்தது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தாலும் அ.தி.மு.க என்னும் கட்சி ஒ.பன்னீர்செல்வத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஒருங்கிணைப்பாளராகவும், துணை முதல்வராகவும் ஓ.பன்னீர்செல்வம் இருந்து வந்தார். எடப்பாடி முதல்வராக இருந்தாலும் கட்சியைப் பொறுத்தவரை இணை ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தார்.

இருவருக்கும் இடையே ஆரம்பம் முதல் உரசல்கள் இருந்தாலும், மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜ.கவின் தலையீட்டின் காரணமாக எடப்பாடி தலைமையிலான ஆட்சி ஐந்தாண்டுகளை நிறைவு செய்தது. ஆட்சியை இழந்தபின்னர் எடப்பாடிக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் வெட்ட வெளிச்சமாகி, இரண்டு ஆண்டுகள் நடந்த மோதல்களுக்கு பின்னர் அ.தி.மு.க எடப்பாடியின் கைவசமாகியிருக்கிறது.

இது போன்ற முரண்பாடுகள் கர்நாடகத்தில் எழுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அமைச்சரவையை தீர்மானிப்பதிலேயே ஆரம்பமாகிவிட்டது. சித்தாராமையா முதல்வராவதற்கு முன்னர் அமைச்சரவையில் யார், யார் என்னென்ன பொறுப்புகள் என்பதெல்லாம் முடிவு செய்யப்பட்டுவிட்டதாக செய்தி அடிபடுகிறது. டி.கே சிவக்குமார் ஆதரவாளர்களில் 6 பேருக்கு முக்கியமான துறைகள் ஒதுக்கப்படுகின்றன.

கர்நாடகத்தில் காங்கிரஸ் பெற்ற வெற்றி, தேசிய அளவில் கட்சியினருக்கு உற்சாகத்தை தந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பெரிய வெற்றிக்குப் பின்னர் யார் முதல்வர் என்பதை தேர்ந்தெடுப்பதில் டெல்லி தலைமை காட்டிய மெத்தனத்திலிருந்து பல உண்மைகள் வெளிப்பட்டிருக்கின்றன. காங்கிரஸ் பெற்ற வெற்றிக்கு டெல்லி மேலிடத்தின் பங்கு மிகக்குறைவு என்பது தெளிவாக தெரிகிறது.

கர்நாடகாவில் உள்ள அனைத்து சமூகங்களும் ஒருங்கிணைந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஓரணியில் இருந்து வாக்களித்திருக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் மேலிடமோ பழைய பார்முலாவை கையிலெடுத்துக் கொண்டு எந்த சமூகத்திற்கு எத்தனை அமைச்சர் பதவியை தரலாம் என்று ஆலோசனையில் இருக்கிறது.

பஜ்ரங் தள் அமைப்பையும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவையும் ஓரே விதமாக கையாண்ட விதமும், தேர்தல் அறிக்கையில் தேவையில்லாம இரு அமைப்புகளையும் குறிப்பிட்டதாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது. ஆனாலும், சிறுபான்மையினரையும் காயப்படுத்திவிடாமல் பெரும்பான்மை இந்து சமூகத்தினரின் ஆதரவையும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆட்சியிலும் இது போன்ற அணுகுமுறை இருக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் பழைய பார்முலா கர்நாடாகாவில் எடுபட்டிருக்கிறது. ஆனால், இரட்டைத் தலைமையோடு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளமுடியுமா என்றால் அது நிச்சயம் இயலாத காரியம் என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள். மிருகபலமுள்ள பா.ஜ.கவை எதிர்ப்பதற்கு காங்கிரஸ் முதலில் ஒற்றைத் தலைமைக்கு தயாராக வேண்டும். அத்தகைய ஒற்றைத் தலைமை மீது காங்கிரஸ் அல்லாத பிற எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை வரவேண்டும்.

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைக்கப்படவேண்டும். அதற்கு முன் மாநில அளவில் காங்கிரஸ் கட்சியோடு முரண்பட்டிருக்கும் எதிர்க்கட்சிகளை ஓரணிக்கு கொண்டு வரவேண்டும். காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரான கார்கேவை முன்னிறுத்துவது போதாது.

கர்நாடாகவில் வெற்றியடைந்த இரட்டைத் தலைமை மாடலையே ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் முன்வைப்பதோடு நாடாளுமன்றத் தேர்தலிலும் அதே பாணியை கையாள காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டு வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது சரிவருமா என்பது அடுத்து வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் தெரிந்துவிடும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com