கார்த்திகைக்கு தயாராகும் சுடுமண் விளக்குகள்!

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

கார்த்திகை திருநாளுக்காக சுடுமண் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்.

கார்த்திகை திருநாளில் வீடுகள், கோயில்கள், அலுவலகங்கள், நிறுவனங்கள், வியாபாரக் கூடங்கள் என்று அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டிற்கான கார்த்திகை திருநாள் இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட இருக்கிறது.

இதற்காக தற்போது தமிழக மக்கள் மட்டும் இன்றி பல்வேறு மாநில மக்களும் தயாராகி வருகின்றனர். இதற்காக மண் விளக்குகளை வாங்க மக்கள் தற்போது தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது சுடுமண் விளக்கு செய்யும் பணிகள் தீவிரம் அடைந்து இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கக்கூடிய களிமண்களைக் கொண்டு சிறிய சுட்டி விளக்கு, தேங்காய் விளக்கு, முறம் விளக்கு, காமாட்சி விளக்கு, மேஜிக் விளக்கு, மாட விளக்கு, லட்சுமி விளக்கு, ஸ்டார் விளக்கு, அன்ன விளக்கு, குத்துவிளக்கு ஆகியவை செய்யப்படுகின்றன.

பிறகு அவை சூலையில் சூடு காட்டப்பட்டு பக்குவம் அடைந்த பிறகு வண்ணம் தீட்டி விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் நகரப் பகுதியில் மட்டும் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுடுமண் விளக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இங்கு உற்பத்தி செய்யப்படும் சுடுமண் விளக்கு 2 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சுடுமண் விளக்கிற்கான ஆர்டர்கள் அதிக அளவில் வந்திருப்பதால் இரவு பகல் பாராது உற்பத்தி பணியை மேற்கொள்வதாக சுடுமண் விளக்கு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் விளக்குகள் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ஓடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் திண்டுக்கல் பகுதியில் கிடைக்கும் களிமண் வலுவானதாக இருக்கும் தன்மை கொண்டது.

இதனால் விநாயகர் சிலைகள் முதல் நவராத்திரிக்கான கொலு பொம்மைகள் வரை திண்டுக்கல் மண்ணில் செய்யப்படுவதற்கு என்று தனி சிறப்பு உண்டு என்றும் தெரிவிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com