ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக...
நேற்றைய ஐபிஎல் தொடர் 16வது சீசனில், டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் மோதிய நிலையில், டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதோடு, டேவிட் வார்னர் இந்த சீசனில் தனது முதல் சிக்ஸரை விளாசி முதல்முறையாக ஒரு மோசமான சாதனையை தடுத்து நிறுத்தியுள்ளார்.
ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்றை போட்டி நடைபெற்றது. டாஸை வென்ற டெல்லி அணி, பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
இப்போட்டியைப் பொறுத்தவரை ஒரு மோசமான சாதனை ஒன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர், இந்த ஐபிஎல்-லில் முன்னதாக 6 போட்டிகளில் விளையாடி 285 ரன்களை எடுத்திருந்த நிலையில், ஒரு சிக்ஸர் கூட அவர் அடிக்கவில்லை. இது அவரது ரசிகர்களுககு பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்து வந்தது.
இந்நிலையில், 7வது போட்டியில் நேற்று ஹைதராபாத் அணியுடன் மோதிய நிலையில், 21 ரன்களை எடுத்து மொத்தம் 306 ரன்களை எடுத்து ஆரஞ்சு கேப் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று அவர், வாஷிங்டன் சுந்தர் வீசிய 4வது ஓவரில் தனது முதல் சிக்சரை விளாசினார். இதையடுத்து, ஐபிஎல் வரலாற்றில் சிக்ஸரே அடிக்காமல் 290 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்ததோடு, மேற்கொண்டு அவர் சிக்ஸர் அடித்ததன் மூலம் இந்த சாதனையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.