ஆபரேஷன் தியேட்டர் வாசலிலேயே கவலையோடு காத்திருந்த ப்ராங் வொரல்!
நாரி காண்ட்ராக்டர் (Nari Contractor) தலைமையின் கீழ் 1961-62ல் இந்தியா அணி இங்கிலாந்துக்கு எதிராக தொடரை வென்றது. அதைத் தொடர்ந்து, அதே வருடம், இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்குதான் அவரது வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.
மேற்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டியில், நாரி காண்ட்ராக்டர் பேட்டிங் செய்தபோது சார்லி கிரிஃபித்தின் பவுன்சர் அவரது மண்டை ஓட்டின் பின்புறத்தில் மோதியது.
மேற்கு இந்திய வேகப் பந்து வீச்சாளர் சார்லி கிரிப்பித் (Charlie Griffith) வேகமாக ஓடி வந்து பந்து போட்டார். எதிரில் பேட்டிங் செய்துகொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் இடது கை ஆட்டக்காரரான நாரி காண்ட்ராக்டர், எதிரில் இருந்த பெவிலியன் ஜன்னல் கதவை அப்பொழுது யாரோ திறக்க, பேட்ஸ்மேனின் கவனம் சிறிது சிதறவே, அடுத்த கணம், சார்லி கிரிஃபித் வீசிய பந்து பேட்டிங் செய்துகொண்டிருந்த நாரி காண்ட்ராக்டர் மண்டையின் பின் தலையில் பலமாக மோதியது. உடனே மைதானத்தில் சரிந்து விழுந்தார். ரத்தம் சொட்ட சொட்ட காண்ட்ராக்டர் பெவிலியனுக்கு தூக்கி செல்லப்பட்டார்.

அமெரிக்காவிலிருந்து டாக்டர் வரை வழைக்கப்பட்டு எமெர்ஜென்சி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்பொழுது தேவைப்பட்ட இரத்தத்தை கொடுக்க முதலில் வந்தவர்தான், அன்றைய மேற்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ப்ராங் வொரல் (Frank Worrell).
அவரைத் தவிர, இந்திய ஆட்டக்காரர்கள் பாபு நட்கர்னி (Bapu Nadkarni), பாலி உம்ரீகர் (Polly Umrikar), சந்து போர்டே (Chandu Borde), மற்றும் பத்திரிகையாளர் பிரபு (Prabhu).
ஆறு நாட்கள் பேச்சு, மூச்சு இல்லாமல், உயிருக்குப் போராடி உயிர் பிழைத்தார் நாரி காண்ட்ராக்டர். அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றபோது, ஆபரேஷன் தியேட்டர் வாயிலிலேயே கவலையோடு காத்துக்கொண்டு இருந்தார் ப்ராங் வொரல். ஆஸ்பத்திரிக்கு பலமுறை வந்தும் காண்ட்ராக்டரை பார்த்தும் சென்றார். அந்த மேட்சை பார்வையாளராக பார்க்க வந்தவர்தான் ப்ராங் வொரல்.
முதலில் அந்தக் குறிப்பிட்ட மேட்சில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் நாரி காண்ட்ராக்டர் விளையாடுவதாகவே இல்லை. பிற ஆட்டக்காரருக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக கடைசி நிமிடத்தில் விளையாட முடிவு எடுத்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியவரின் வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டது. அறுபது வருடங்கள் கழித்து சமீபத்தில்தான் நாரி காண்ட்ராக்டரின் தலையில் வைத்து இருந்த ப்ளேட் அகற்றப்பட்டது.
உடல் நலம் சரியாகியும் நாரி காண்ட்ராக்டரின் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போய்விட்டது. ஆபத்து கருதி அந்த கால கட்டத்திய தேர்வாளர்கள், அவரை தேர்வு செய்யவே இல்லை. நாரி காண்ட்ராக்டருக்கு அது ஒரு பெரிய குறை.
ப்ராங் வொரல்லுக்கு ஸர் (Sir) பட்டம் பின்னால் அளிக்கப்பட்டது. 1 August 1924 அன்று மேற்கு இந்திய தீவின் பார்படாஸ் பகுதியில் இவர் பிறந்தார். மறைந்தது 13 March 1967ம் ஆண்டு மேற்கு இந்திய தீவின் கிங்க்ஸ்டன் ஜமிகா பகுதியில். இவர் வாழ்ந்ததோ நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் மட்டும் தான்.

இவர் தான் முதல் கருப்பு இனத்தை சேர்ந்த கிரிக்கெட் கேப்டன். மேற்கு இந்திய குழுவில் பல்வேறு இடங்களில் இருந்து வந்து ஆடி வந்தனர். இவரது மனிதாப முயற்சியால் எல்லோரையும் ஒரே குழுவிற்காக ஆட வைத்தார். இது இவரது முதல் வெற்றி. மேலும் விளையாட்டை விளையாட்டாய் பார்க்க வைத்து ஆட வைத்தார்.
இவரது தலைமையில் ஆஸ்திரேலியாவிற்கு சென்ற கிரிக்கெட் குழு முதல் டை (tie) முடிவை டெஸ்ட் கிரிக்கெட்டில் கொடுத்தது. இரண்டு டீம்களும் சம ஸ்கோர் செய்து யாருக்கும் வெற்றியோ அல்லது தோல்வியோ இல்லாத நிலையில் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் கடைசி பந்து வரை ஆடிய அந்த ஆட்டம் இன்றளவும் கிரிக்கெட் உலகில் பேசப்பட்டு வருகின்றது.
1961-ம் வருடம் ப்ராங் வொரல் தலைமையில் விளையாடிய இந்த மேற்கு இந்திய குழு, டெஸ்ட் தொடர் முடிவில், ஆஸ்திரேலிய குழுவிடம் தோல்வியைத் தழுவிய நிலையிலும், ஆஸ்திரேலிய ரசிகர்களால் பெரிதும் மதிக்கவும், போற்றவும் பட்ட குழுவாக திகழ்ந்தது. இந்த தொடரில் முடிவில் Frank Worrell Trophy கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டு மேற்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா குழுகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் பந்தயங்களில் வெற்றிபெறும் அணிக்கு அளிக்கப்பட்டு வருகின்றது.
ப்ராங் வொரல் ஆடிய முதல் டெஸ்ட் மேட்ச் 1947–48 இங்கிலாந்து டீமிற்கு எதிராக. (England team of Gubby Allen) இங்கிலாந்தில் மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் பயிலும்போதே, கூடவே கிரிக்கெட்டும் ஆடி வந்தார். இவர் எடுத்த அதிக பட்ச டெஸ்ட் ஸ்கோர், இங்கிலாந்திற்கு எதிராக 261 ரன்கள். இவர் முதல் தர கிரிக்கெட்டில் ஜோடி சேர்ந்து 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து உள்ளார். வலது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை பௌலராகவும் திகழ்ந்தார். இவர் முட்டிப் போட்டுக்கொண்டு அடிக்கும் ஷாட்டைப் பார்க்க தனி ரசிகர் கூட்டம் தவம் கிடக்கும்.
இவரது தலைமையில், மேற்கு இந்திய கிரிக்கெட் அணியினர் விளையாடியது மொத்தம் 15 டெஸ்ட் மேட்சுகளே. அவற்றில் 9 டெஸ்ட் மேட்ச்களில் வெற்றி பெற்றார். மூன்று மேட்சுகளில் தோல்வியும் ஒரு மேட்சில் டையும் அடைந்தார். 1963 ம் வருடம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து ஒய்வை அறிவித்து விட்டார்.
1964ம் வருடம், ராணி எலிசபெத், இவருக்கு ஸர் பட்டம் அளித்து கௌரவித்தார். பர்படாஸ் நாட்டின் மத்திய வங்கி இவரின் சாதனைக்காக கரென்சி நோட் அறிமுகப்படுத்தியது. ஐந்து டாலர் மதிப்பு கொண்ட அந்த நோட்டில் இவரது படமும் பெற்றுள்ளது.
இவரது மனிதாபிமான குணத்தை பாராட்டி கிரிக்கெட் அசோசியிஷேன் ஆப் பெங்கால், 1981ம் ஆண்டு இவரது பெயரில் இரத்த தான முகாம் துவக்கியது. ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள், பொதுமக்கள் முன் வந்து இரத்த தானம் செய்தனர். வருடா வருடம் பிப்ரவரி 3ம் தேதி அன்றைய தினம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானம் மற்றும் பல்வேறு இடங்களில் மேற்கு வங்காளம் முழுவதும் இன்றும், இரத்த தான முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த தினத்தை (Sir Frank Worrell Day) ஸர் ப்ராங் வொரல் தினமாக அறிவித்து கொண்டாடி வருகின்றனர்.
2009ம் ஆண்டு, நாரி காண்ட்ராக்டருக்கு 74 வயதாகிய போது, ட்ரினிடாடில் (Trinidad) சர் ப்ராங் வொரல் நினைவு இரத்த தானம் முகாமை (Sir Frank Worrell Memorial Blood Drive) துவக்கி வைத்தார்.
ஸர் ப்ராங் வொரல் கிரிக்கெட் விளையாடியதுடன், மனித நேயத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தார். மனிதருள் மாணிக்கமாகவும் திகழ்ந்தார்.