“நான்தான் உலகின் நம்பர்-1, எனக்கு பின்னால் தான் விராட் கோலி” பாகிஸ்தான் வீரரின் அதிரடி!

“நான்தான் உலகின் நம்பர்-1, எனக்கு பின்னால் தான் விராட் கோலி” பாகிஸ்தான் வீரரின் அதிரடி!

இந்திய அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மென் விராட் கோலி. இதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகாலமாக சதம் அடிக்காமல் சற்று பின்தங்கியிருந்த கோலி, கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசியகோப்பை போட்டியில் சதம் அடித்து மீண்டும் தனது நிலையை உயர்த்திக் கொண்டுள்ளார். இதுதான் டி20 இன்டர்நேஷனலில் அவர் போட்ட முதல் சதமாகும். அதிலிருந்து வேகமெடுத்து வருகிறார். சமீபத்தில் அவர் விளையாடிய 7 ஒருநாள் சர்வேதச போட்டியில் மூன்றில் சதம் அடித்துள்ளார். இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் சர்வேதச போட்டிகளில் மொத்தம் 49 சதங்களை விளாசியுள்ளார். கோலி அவரைவிட மூன்று சதங்கள் மட்டுமே குறைவாக அடித்துள்ளார்.

இதனிடையே 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் (லிஸ்ட்-ஏ) நான்தான் உலகின் நம்பர்-1 ஆட்டக்காரர். விராட் கோலி எனக்குப் பின்னால்தான் இருக்கிறார் என்று பாகிஸ்தான் வீரர் குர்ரம் மன்சூர் கூறிவருகிறார்.

இதுவரை அவர், பாகிஸ்தான் அணிக்காக 16 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள், 7 ஒருநாள் சர்வதேச போட்டி மற்றும் 3 டி20- இன்டர்நேஷனல் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் அளித்துள்ள ஒருபேட்டியில் லிஸ்ட்-ஏ போட்டியில், தான் நம்பர் -1 இடத்தை வகிப்பதாகவும், இந்திய வீரர் கோலி அதற்கு பின்னால் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மன்சூர், 2016 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்காக விளையாடியுள்ளார். இந்திய அணியின் காப்டன் விராட் கோலியுடன் என்னை நான் ஒப்பிடவில்லை. ஆனால், சிறப்பு அம்சம் என்னவெனில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் எனது சாதனைகளைத்தான் நான் கூறிவருகிறேன் என்கிறார்.

50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதல் 10 இடங்களில் யார் இருந்தாலும் எனக்கு கவலையில்லை. ஆனால், நான் முதலிடத்தில் இருக்கிறேன். எனக்கு பின்னால்தான் கோலி இருக்கிறார். கோலி 6 இன்னிஸ்ஸுக்கு ஒரு முறைதான் சதம் அடித்துள்ளார். ஆனால், நானோ 5.68 இன்னிஸ்ஸுக்கு ஒரு முறை சதம் அடித்துள்ளேன். இது உலக சாதனையாகும். கடந்த 10 ஆண்டுகளில் எனது சாதனை சராசரியாக 53 ரன்களாகும். லிஸ்ட்- ஏ கிரிக்கெட்டில் உலக அரங்கில் நான் ஐந்தாம் இடத்தை வகிக்கிறேன் என்று யூடிப் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் மன்சூர் கூறியுள்ளார்.

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தாம் தொடர்ந்து நல்ல ஸ்கோர் எடுத்து வந்தபோதிலும் பாகிஸ்தான் அணி தேர்வுக்குழுவினர் தம்மை தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும் 36 வயது இளைஞரான மன்சூர் குறிப்பிட்டுள்ளார்.

2015 முதல் இதுவரை 48 இன்னிங்ஸ் விளையாடி 24 சதங்களை எடுத்துள்ளேன். தேசிய அளவிலான டி-20 போட்டியிலும் நான் அதிக ஸ்கோர் எடுத்துள்ளது மட்டுமல்லாமல் சதம் அடித்துள்ளேன். ஆனாலும் என்னை புறக்கணிப்பது ஏன் என்று தெரியவில்லை என்று சோகத்துடன் கூறுகிறார் அவர்.

2016 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டிக்காக பாகிஸ்தான் அணியில் விளையாடியுள்ளார் மன்சூர். உள்ளூர் கிரிக்கெட்டை பொறுத்தவரை அவர் சிந்து அணிக்காக விளையாடி வருகிறார். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அவர் இதுவரை 12,000 த்துக்கும் மேலான ரன்களை எடுத்துள்ளார். லிஸ்ட்-ஏ கிரிக்கெட் போட்டியில் மட்டும் 8,000 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com