ஐசியூ-விலிருந்து நேராக கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் வீரர் அபாரம்!

ஐசியூ-விலிருந்து நேராக கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் வீரர் அபாரம்!

எஸ். வீரராகவன்.

துபாயில் நடந்து வரும் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு (நவம்பர் 11) 2-வது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் மோதிக் கொண்டன. இதில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 176 ரன்களை எடுத்தது. இரண்டாவது பேட் செய்த ஆஸ்திரேலியா 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தால் அபார வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக இறுதிகட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் அடித்த ஹாட்ரிக் சிக்சர் அநத அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாயிற்று.. அந்தவகையில் கோப்பையைத் தட்டிச் செல்லும் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியாவும் நியூஸிலாந்தும் தகுதி பெற்றுள்ளன.

இந்தமுறை டி-20 உலக கோப்பையை பாகிஸ்தான் வெல்லும் என்று பரவலாக எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதிபெறவில்லை எனினும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசா, ரிஸ்வான் ஆகிய வீரர்கள் தொடக்கம் முதலே தங்கள் அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப் படுத்தி வந்தனர்.

குறிப்பாக ஆஸ்திரேலியாவுடனான அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானின் போட்டி மிகவும் குறிப்பிடத்தக்கது. காரணம் – பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரரான முகமது ரிஸ்வான், ஆஸ்பத்திரி ஐசியூவில் 2 நாள் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆன கையோடு நேரடியாக மைதானத்துக்கு வந்து போட்டியில் கலந்துகொண்டு விளையாடியிருக்கிறார். அவரது அசாத்திய மனவுறுதியும் திறனும் ரசிகர்களை மலைக்க வைத்துள்ளது.

இத்தனைக்கும் இந்த அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சார்பாக அதிக ரன் எடுத்த வீரர் முகமது ரிஸ்வான்தான். 67 ரன்கள் எடுத்தார். மார்பு சளி தொற்று காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 2 நாட்களாக அனுமதிக்கப் பட்டிருந்த ரிஸ்வான், இந்த போட்டியில் பங்கேற்பதற்காகவே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டிருந்தார். காய்ச்சல் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் முகமது ரிஸ்வான் மற்றும் மூத்த வீரர் சோயிப் மாலிக் ஆகியோர் விளையாடுவது சந்தேகம் என்று நேற்று செய்திகள் வெளியாகின. ஆனால் இருவருமே நேற்று ஆடினார்கள். அதிலும் ரிஸ்வான் கடுமையான பாதிப்பிலிருந்து மீண்டு உடனே ஆட்டத்தில் பங்கேற்றார்.

இதுகுறித்து பாகிஸ்தான் அணி மருத்துவர் நஜீப் சோம்ரூ கூறியதாவது:

முகமது ரிஸ்வானுக்கு கடந்த 9-ம் தேதி கடுமையான மார்பு நோய்த்தொற்று ஏற்பட்டதால், மருத்துவமனை ஐசியூவில் 2 நாட்கள் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் நம்பமுடியாத அளவு வேகமாக குணமடைந்தார். ஆனாலும் போட்டியில் விளையாட அனுமதிப்பது குறித்து யோசனையாக இருந்தது. ஆனால். அவரது உடல்நிலை குறித்த முடிவு முழு அணி நிர்வாகத்தால் எடுக்கப்பட்டது. எனவே நாங்கள் ரிஸ்வானை அணிக்குள் இருக்க சம்மதித்தோம்.

இவ்வாறு நஜீப் சோம்ரூ தெரிவித்துள்ளார்.

ஆனாலும் போட்டியின்போது சற்று சோர்வாகவே இருந்தாலும் அதை சமாளித்து விளையாடியிருக்கிறார் ரிஸ்வான்.

''ரிஸ்வான் விளையாடிய விதம் அவர் ஒரு டீம் மேன் என்பதை நிரூபித்தது. மிகவும் சோர்வாக இருந்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல், 'நான் நிச்சயம் விளையாடுவேன்' என்று சொல்லி அதை நிரூபித்தும் காட்டினார். அவர் ஒரு அருமையான போராட்ட வீரர்.'' என்று பாராட்டியிருக்கிறார், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம். உண்மையிலேயே ரிஸ்வான் ஆஸம்தான்!

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com