இளைஞர் வாழ்வுதனை கவ்வும் ஆன்லைன் சூதாட்டம்! 

இளைஞர் வாழ்வுதனை கவ்வும் ஆன்லைன் சூதாட்டம்! 

-தனுஜா ஜெயராமன்  

 காபாரதத்திலேயே சூதினால் பஞ்ச பாண்டவர்கள் இழந்தது ஏராளம் எனில் சூதின் கொடுமைகளை இதைவிட விளக்கமாக யாராலும் சொல்லிவிட முடியாது 

சீட்டாட்டம் ,குதிரைபந்தையம், லாட்டரி சீட்டுகள்என பல்வேறு காலகட்டங்களில் வாழ்க்கையை சீரழிக்கும் பல சூதுக்கள் பிரபலம். இன்று இத்தகைய பல சூது விளையாட்டுகள் தடைசெய்யப்பட்டும் வழிக் கொழிந்தும் போய்விட்டன. ஆனால் அன்று இந்த விளையாட்டுக்களால் வாழ்க்கையை இழந்த குடும்பங்கள் பற்பல , தெருக்கோடிக்கு வந்த குடும்பங்கள் கோடி.

சூதினால்சின்னாபின்னமாகி சிதைந்த பல குடும்பங்கள் சொல்லி போகும்கண்ணீர்கதைகள் ஏராளம். இதன் நவீன வடிவமாக ,மெல்ல கொல்லும் விஷமாக ,சத்தமேயில்லாமல் நமது வீட்டிற்குள்ளேயே சுலபமாக நுழைந்து, பல குடும்பங்களை சிதைத்து வருகிறது இந்த ஆன்லைன் சூது விளையாட்டுக்கள்.தன்நிலை அறியாமலே அதில் வீழ்ந்து கிடப்பவர்கள் ஏராளமானோர்.  

தகவல் தொழில்நுட்ப வசதிகள் பல்கி பெருகி வளர, இதுமாதிரியான சூதாட்டத் தளங்கள் பெருகி வளருவதில் ஏதும் ஆச்சர்யமொன்றும் இல்லை. வெறும் விளம்பரங்களாக கண்முன் தோன்றி நம்மை ஈர்க்க ஆரம்பிப்பது அதன் முதல் கட்டம்.

ஏதோ ஒரு ஆர்வகோளாரில் என்னவென்று பார்க்க அதன் உள்ளே நுழைய , விளையாட்டை நாம் ஆடாமலே நமது கணக்கில் பணத்தை வரவு வைக்கும் உத்தி நம்மை அந்த புதைக்குழியை நோக்கி சுலபமா இழுத்து செல்லும் பெரும் தந்திரம். அதன் பிறகு சும்மா முயன்று பார்க்கலாமே என துளிர்க்கும் ஆசையில் கொஞ்சமாக விளையாடி பார்க்க, முதலில் சிறுசிறு வெற்றிகளை தரும் உத்திகள் எல்லாமே அதன்நம்பகதன்மையை நம்முன் காத்திரமாக நிறுவி விடும் சாமர்த்தியம்.

கொஞ்சம் கொஞ்சமாக அதன் போதை நம்மை உள்ளிழுக்க, அதன் கோரமுகங்கள் தனது அசுர கரங்களால் நம்மை விழுங்கி மொத்தமாக புதைக்குழிக்குள் உள்ளிழுத்துவிடும். அப்படியொருஅபாயம் கொட்டிகிடைக்கும் போதையான விளையாட்டு இது. கடைசிகட்டத்தில் விளையாட்டு போதைத் தலைக்கேறிவெறிகொண்டு ஆடத்துவங்கும்போது மொத்தமாய் நம்மை இழுத்து கொண்டிருக்கும் அந்த புதைக்குழி.

எல்லா சூதாட்டங்களுமே தங்களுக்கான லாபத்தை மட்டுமே பிரதானமாக கொண்டு இயங்குபவைதானே! அதன் சிஸ்டங்களே அவ்வாறுதான் வடிவமைக்கபட்டிருக்கும்.அடுத்தவர்களை பணக்காரனாக்க அவர்கள் தொழில் செய்ய போவதில்லை. இந்த சிறு உண்மை கூட புரியாதவர்களே இந்த ஆன்லைன் விளையாட்டின் பங்கேற்பாளர்களாக இருப்பது பெருங்கொடுமை.

அவ்வப்போது சிறுசிறு வெற்றிகளை கொடுத்து நம்மை அதிலேயே தக்கவைக்கும் தந்திரங்களை செய்வதே அதன் ஆகப்பெரும் உத்தி! நாம் சற்று ஒதுங்கி அதிலிருந்து வெளியேற முயன்றாலுமேசும்மாவே நமது கணக்கில் பணத்தினை வரவு வைத்து நம்மை மீண்டும் புதைகுழிக்குள் ஈர்க்கும்அப்படியொரு சாமர்த்தியம் அந்த ஆன்லைன் விளையாட்டிற்கு உண்டு.

நம்மால் ஜெயிக்க முடியும் என்று நம்மையே நம்ப வைப்பதே அந்த விளையாட்டின் தந்திர உத்தியின் முதல் சூத்திரம். சூதாட்டங்கள் ஆடி கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் இதுவரை யாராவது உண்டா? இந்த சிறிய தெளிவு நம்மிடமிருந்தால் இதிலிருந்து விலகி இருக்கலாம்.

'ஒருத்தரை கவிழ்க்கணும்னா அவனுடைய ஆசைகளை முதலில் கொஞ்ச கொஞ்சமா தூண்டணும்' என்கிற உத்திகளை தவிர, ஆன்லைன் சூதாட்டத்தில்  வேறில்லை. பணத்தாசை பிடித்தவர்களும், உழைக்காமலே பணம் சம்பாதிக்க எளியவழியாக நினைக்கும் சோம்பேறிகளுமே அவர்களின் வலையில் சுலபமாக விழும் தூண்டில் மீன்கள்.

இன்று இந்த ஆன்லைன்விளையாட்டுக்களால் பாதிக்கபட்டவர்கள் பல பேர். இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆன்ராய்ட் போன் வைத்திருக்கும் பலரும் இதனை விளையாடி கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது.

இதில் இன்று அவ்விளையாட்டுகளிலிருந்துவெளிவர இயலாமல் விளையாடுபவர்கள் முதலில் சாதாரணமாக ஒரு த்ரிலுக்காக நுழைந்தவர்கள் தான் .  பின்னர் அதற்கு அடிமையாகி தன் வாழ்க்கையை தனக்கே தெரியாமல் இழந்து கொண்டிருப்பவர்கள் இன்று பலர்.

முதலில் நமது வீடுகளில் அதிக நேரம் ஆன்லைனில் இருப்பவர்களை , வழக்கத்தை விட வித்தியாசமாக நடப்பவர்கள், எப்போதும் பதட்டமாக இருப்பவர்களை கண்காணிப்பது அவசியம். 

இந்த விளையாட்டுக்களால் பாதிக்கபட்டவர்களை இனங்கண்டு அவர்களிடம் வழக்கமான நடவடிக்கைகளை விட எதேனும் மாற்றங்கள் தென்பட்டால்அவர்களுக்கு மனசிகிச்சைகள் கட்டாயம் தேவை.  அவர்கள் அதிலிருந்து வெளிவர நாம் உதவுவது அவசியம்.  

ஏற்கனவே இத்தகைய விளையாட்டுகளால் பாதிக்கபட்டு குடும்பங்கள் சிதைந்து போனவர்கள் ஏராளம். தனது சொத்துகளை இழந்து கடன் சூழலுக்கு தள்ளப்பட்டு உயிரை இழந்தவர்கள் ஏராளம். தற்போது நேற்றுவரை மகிழ்வாக வாழ்ந்த குடும்பங்கள் ஒரே நாளில் தலைகீழாய் சிதைந்து போவதெல்லாம்நமக்கு விடப்பட்ட கொடிய எச்சரிக்கையே. 

தனது மனைவியை, தனது பால்மணம் மாறாத பச்சிளம்குழந்தைகளை கூட கொல்லும் கொடூர வன்முறைக்கு இந்த விளையாட்டுகள் தள்ளிவிடும் என்பது இதன் மற்றுமொரு அதிர்ச்சியான கோரமுகம். இனி இதுமாதிரியான நிகழ்வுகள் நிகழாமல் தற்காத்து கொள்வது நமது கைகளில் தான் உள்ளது.

நாம் வாழ்க்கையில் எடுத்து வைக்கும்சிறு தவறான அடிகளும் நமது வாழ்க்கையை புரட்டி போடும் அபாயங்கள் உண்டு என்பதை உணர்ந்து கொள்ள தான் வேண்டும். கண்ணிமைக்கும் நேரத்தில் பூதாகரமான வெற்றிடம் ஒன்று நம்மை விழுங்க பார்க்கலாம். அதிலிருந்து நம்பிக்கை என்னும் கயிற்றை படித்து வெளிவருவதே நமது சாதுர்யம் 

எப்போது வேண்டுமானலும் தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வலாம்..ஆனால் நம்மை நாமே தானேவெல்ல அல்லது காத்துக்கொள்ள முடியும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com